ஆவுடையார்கோவிலில் தொழிலாளியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு




ஆவுடையார்கோவிலில் தொழிலாளியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொழிலாளி படுகாயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் மீமிசல் சாலை பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 40). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது ஓட்டலுக்கு வடநகரை சேர்ந்த பழனி, ஸ்ரீராம்தீபக் உள்ளிட்ட நபர்கள் சாப்பிட வந்துள்ளனர்.

அப்போது ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த மாணிக்கத்தை பழனி உள்ளிட்டவர்கள் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மாணிக்கத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சாலை மறியல்

மாணிக்கத்தை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவருடைய உறவினர்கள் ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், ஆவுடையார்கோவில் போலீசார் வடநகர் பழனி, ஸ்ரீராம் தீபக் உள்ளிட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பலநாட்கள் ஆகியும் குற்றவாளிகளை கைது செய்யாத போலீசாரை கண்டித்து ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகம் முன்பு மாணிக்கத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டாட்சியர் (பொறுப்பு) கருணாகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார், தாசில்தார் மார்ட்டின் லூதர்கிங் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குற்றவாளிகளை 5 நாட்களுக்குள் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் ஆவுடையார்கோவில்-அறந்தாங்கி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments