அஜ்மீர் - டெல்லி கண்டோன்மென்ட் இடையே‌ ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை‌காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
அஜ்மீர் -டெல்லி கண்டோன்மெண்ட் இடையிலான வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

2 மாதங்களில் 6-வது ரெயில்

ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீருக்கும், டெல்லி கண்டோன்மெண்டுக்கும் இடையே ‘வந்தே பாரத்’ ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

இதுதான் ராஜஸ்தானின் முதலாவது வந்தே பாரத் ரெயில் ஆகும்.இதன் தொடக்க விழா நேற்று ஜெய்ப்பூர் ரெயில் நிலையத்தில் நடந்தது. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். கடந்த 2 மாதங்களில் தொடங்கப்பட்ட 6-வது வந்தே பாரத் ரெயில் இதுவாகும்.வழக்கமான ரெயில் போக்குவரத்து இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஆஜ்மீர்-டெல்லி கண்டோன்மெண்ட் இடையிலான தூரத்தை 5 மணி 15 நிமிடத்தில் இந்த ரெயில் கடந்து விடும். இது, அதிவேக சதாப்தி ரெயிலின் பயண நேரத்தை விட 1 மணி நேரம் குறைவாகும்.

சுற்றுலாவுக்கு பயன்

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசியதாவது:-

வந்தே பாரத் ரெயில், ராஜஸ்தான் மாநிலத்தின் சுற்றுலா தொழிலுக்கு பெரிதும் பயன் அளிக்கும். ‘முதலில் இந்தியா’ என்ற உணர்வை வந்தே பாரத் ரெயில்கள் வலுப்படுத்துகின்றன. இன்றைய வந்தே பாரத் ெரயில் பயணம், நாளைய இந்தியாவின் வளர்ச்சி பயணத்துக்கு இட்டுச்செல்லும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜெய்ப்பூர் ரெயில் நிலைய நிகழ்ச்சியில், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் நேரில் பங்கேற்றனர்.

அசோக் கெலாட்டுக்கு பாராட்டு

ராஜஸ்தான் காங்கிரசில் நிலவும் உட்பூசலுக்கிடையே நிகழ்ச்சியில் அசோக் கெலாட் பங்கேற்றதை குறிப்பிட்டு பிரதமர் மோடி பாராட்டினார். அவர் பேசியதாவது:-

தற்போது பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கிடையே அசோக் கெலாட் பயணித்து வருகிறார். இருப்பினும், வளர்ச்சி பணிக்காக நேரம் ஒதுக்கி, ரெயில்வே நிகழ்ச்சியில் பங்கேற்ற அசோக் கெலாட்டுக்கு எனது விசேஷ நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை வரவேற்கிறேன். சுதந்திரம் கிடைத்தவுடன் தொடங்கப்பட்டிருக்க வேண்டிய பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இருப்பினும், அசோக் கெலாட் என் மீது நம்பிக்கை வைத்து கோரிக்கை வைத்துள்ளார். அது அவரது நம்பிக்கை. அவரது நம்பிக்கைதான் எனது நட்பின் பலம். நட்பு மீது வைத்துள்ள நம்பிக்கைக்காக அவருக்கு நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

பெரிய பரிசு

நிகழ்ச்சியில், முதல்-மந்திரி அசோக் கெலாட் பேசியதாவது:-

வந்தே பாரத் ரெயில், ராஜஸ்தானுக்கு கிடைத்த பெரிய பரிசு. ராஜஸ்தானில் விரைவான தொழில் வளர்ச்சி நடந்து வருகிறது. இதற்காக ரெயில் வசதிகள் அதிகரிக்கப்பட்டால், இம்மாநிலம் பொருளாதாரத்தில் முதன்மை மாநிலமாக உருவெடுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments