இந்த மாதம் தொடங்கும் காங்கேசன்துறை - காரைக்கால் படகு போக்குவரத்துக்கு ஏற்பாடுகள் தீவிரம் காங்கேசன் துறைமுகத்தை விரிவுபடுத்தும் பணிக்கு கடற்படை உதவி
இந்த மாதம் தொடங்கும் இலங்கை காங்கேசன்துறை - இந்தியா காரைக்கால்  இடையே படகு போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதற்காக காங்கேசன்துறை துறைமுகத்தை விரிவுபடுத்தும் பணிகளில் இலங்கை கடற்படை ஈடுபட்டு உள்ளது.

படகு போக்குவரத்து

இந்தியாவின் காரைக்காலில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு படகு போக்குவரத்து இயக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இந்த சேவை இந்த மாதம் 29-ந் தேதி தொடங்கும் என இலங்கை சிவில் விமான போக்குவரத்து மந்திரி நிமல் சிறிபாலா டிசில்வா ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

எனவே இந்த திட்டத்துக்கான பணிகளை இலங்கை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக காங்கேசன்துறை துறைமுகத்தில் படகு போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

பயணிகள் முனையம்

அந்தவகையில் காங்கேசன்துறை துறைமுகத்தை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்கு உதவ இலங்கை கடற்படையும் தற்போது முன்வந்துள்ளது.

அதன்படி சுங்கத்துறை மற்றும் குடியேற்றத்துறை சேவைகளுக்காக அந்த துறைமுகத்தில் 1000 சதுர மீட்டரில் பயணிகள் முனையம் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

60 வீரர்கள்

இலங்கை துறைமுகம், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, கடற்படை தளபதி பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தலின்பேரில், காங்கேசன்துறை துறைமுக வசதிகளை விரிவுபடுத்துவதற்கு மனிதவளம் மற்றும் நிபுணத்துவத்தை வழங்குவதில் இலங்கை கடற்படை தீவிர பங்களிப்பை வழங்கியுள்ளது.

மேலும் போக்குவரத்து மற்றும் சிறந்த உள்கட்டமைப்பை வழங்குவதற்கும் துறைமுகத்தின் வசதி விரிவாக்கத்தை கடற்படை தொடங்கியுள்ளது.

கடற்படை சிவில் என்ஜினீயர் ஒருவரின் மேற்பார்வையின் கீழ் 60 கடற்படை வீரர்கள் கொண்ட குழு பயணிகள் முனையத்தின் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகள் நிறைவடைந்ததும் இலங்கை துறைமுக அதிகார சபையிடம் ஒப்படைக்கப்படும்.

சிக்கனமான போக்குவரத்து

இந்த திட்டம் காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் துறைமுகத்தை இணைப்பதுடன், இரு நாடுகளுக்கு இடையே சிக்கனமான மற்றும் வசதியான போக்குவரத்து முறையை வழங்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

காங்கேசன்துறை- காரைக்கால் இடையே இயக்கப்படும் படகு ஒன்றில் 300 முதல் 400 வரையான பயணிகள் செல்ல முடியும். இரு துறைமுகங்களுக்கு இடையேயான பயண நேரம் 3½ மணி என படகு உரிமையாளர்கள் தெரிவிதது இருந்தது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments