அம்ரித் திட்டத்தில் மேம்பாட்டு பணிகள்: புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு திருவப்பூர் ரெயில்வே கேட்டையும் பார்வையிட்டனர்




அம்ரித் திட்டத்தில் மேம்பாட்டு பணிகள் தொடர்பாக புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் திருவப்பூர் ரெயில்வே கேட்டையும் பார்வையிட்டனர்.

அதிகாரிகள் ஆய்வு

தெற்கு ரெயில்வேயில் அம்ரித் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் புதுக்கோட்டை ரெயில் நிலையமும் ஒன்றாகும். இதில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், புதிய கட்டிடங்களை கட்டவும் ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அம்ரித் திட்ட மேம்பாட்டு பணிக்கான தெற்கு ரெயில்வே முதன்மை திட்ட அதிகாரி பொன் பாலசுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் ரெயில் மூலம் நேற்று மதுரையில் இருந்து திருச்சி வழியாக புதுக்கோட்டை ரெயில் நிலையம் வந்தனர்.

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நடைமேடை, நடைபாதை மேம்பாலம், ரெயில் நிலைய வளாகப்பகுதி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.


திருவப்பூர் ரெயில்வே கேட்

முன்னதாக திருவப்பூர் ரெயில்வே கேட்டை அவர்கள் பார்வையிட்டனர். இந்த கேட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க மாநில அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. ரெயில்வே துறையும் ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது. இதனால் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற உள்ளது. இதில் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற உள்ளதால் இந்த இடத்தை ரெயில்வே அதிகாரிகள் அளவிட்டு குறித்துக்கொண்டனர். எதிர்காலத்தில் ரெயில் போக்குவரத்திற்கு ஏற்ப இந்த மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஆய்வுக்கு பின் அம்ரித் திட்டத்தின் தெற்கு ரெயில்வே முதன்மை திட்ட அதிகாரி பொன் பாலசுந்தரம் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிக்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி தான் பணிகள் தொடங்கப்படும். திருவப்பூர் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைப்பதற்காக மாநில அரசின் ஆணை இன்னும் ரெயில்வே நிர்வாகத்திற்கு வரவில்லை. திருவப்பூர் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியை 1½ ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments