ரூ.2000 போச்சே.. விம்மி அழுத பாட்டி! மகன் திருடிய பணத்தை போலீசிடம் கொடுத்த தாய்! கைது செய்ய கோரிக்கை
யாசகம் பெற்ற பணத்தோடு சாலையோரம் அமர்ந்திருந்த மாற்றுத் திறனாளி மூதாட்டியிடம் பணத்தை எண்ணித் தருவதாக கூறி அதை எடுத்துக் கொண்டு திருடன் தப்பிச் சென்ற நிலையில், அவனது தாயார் போலீசாரிடம் பணத்தை திருப்பிக் கொடுத்து இருப்பதுடன், தலைமறைவாக இருக்கும் தன்னுடைய மகனை கைது செய்யவும் வலியுறுத்தி உள்ளார்.


தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை அடுத்த மகிழங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மரகதம். கை கால்கள் முறையாக செயல்படாத மாற்றுத்திறனாளியான இவர், அதிராம்பட்டினம் கடைத்தெருவில் அமைந்து உள்ள தக்வா பள்ளிவாசல் அருகே யாசகம் பெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் யாசகம் பெற்ற தொகையான ரூ.2,000 உடன் அமர்ந்து இருந்தார்.

அப்போது ஒரு இளைஞர் மூதாட்டி அருகே சென்று சில்லரை கேட்டு உள்ளார். இவரும் அவரை நம்பி பணத்தை எடுத்துக்கொண்டு எண்ணிவிட்டு எடுத்துத் தருமாறு கூறி உள்ளார். இதையடுத்து மூதாட்டியிடம் தொகையை பெற்ற, இளைஞர் அதை எடுத்துக்கொண்டு திருப்பித் தராமல் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி பணத்தை பறிகொடுத்த விரக்தியில் அழுதுகொண்டு இருந்தார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் மூதாட்டியிடம் நடந்ததை விசாரித்தனர். அதன் தொடர்ச்சியாக மசூதியின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை தேடியபோது, இளைஞர் ஒருவர் மூதாட்டியிடம் பேசிக்கொண்டு இருப்பதும், அவர் பணத்தை வாங்கி எண்ணுவதுபோல் நடித்து அங்கிருந்து மெதுவாக எழுந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதை தொடர்ந்து அவ்வழியாக சென்றவர்களை அழைத்து மூதாட்டி நடந்த விபரத்தை கூறியதும் பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் மூதாட்டி பேசிய வீடியோவும், சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. பாதிக்கப்பட்ட மூதாட்டி பேசுகையில், "சில்லரை கேட்பதாக சொன்னார். கேட்டவுடனே கொடுத்தேன். அவராக பையில் இருக்கும் 50 ரூபாய், 20 ரூபாய் எல்லாவற்றையும் அள்ளினார். அது எப்படியும் 2000 ரூபாயாவது இருக்கும். அதை எடுத்துக்கொண்டு அங்கு சென்று அமர்ந்தார். என் காசை கொடு என்று கேட்டேன். என்னை பைத்தியமா என்று சொல்லி சென்றுவிட்டார்." என்றார்.

இந்த வீடியோவை வெளியிட்ட ஹசன் என்பவர் காவல் நிலையத்தில் புகாரளித்ததுடன், பணத்தை எடுத்துச் சென்ற நபரை பார்த்தால் தனக்கு தகவல் தெரிவிக்குமாறு தனது தொடர்பு எண்ணையும் பதிவிட்டு இருந்தார். இதனை அறிந்த பணத்தை திருடிச் சென்ற ஹனிபாவின் வயதான தாய், தனது மகனின் செயலை கண்டு வேதனை அடைவதாக கூறி 2000 ரூபாயை வழங்கினார். அத்துடன் தலைமறைவாக இருக்கும் தனது மகனை கைது செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

இதனை தொடர்ந்து அதிராம்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர் ஐயப்பனுடன், வீடியோவை வெளியிட்ட ஹசன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது ரூ.2000 பணத்தை ஒப்படைத்தனர். இதனை பெற்றுக்கொண்ட மூதாட்டி மரகதம் உதவியவர்களுக்கும் போலீசாருக்கும் மனதார நன்றி தெரிவித்து இருக்கிறார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments