ஆவுடையார்கோவில் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
ஆவுடையார்கோவில் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடிநீர் கேட்டு...

ஆவுடையார்கோவில் தாலுகா புத்தாம்பூர், செங்கானம் ஆகிய ஊராட்சிகளில் பேயாடிக்கோட்டை, செங்கானம், பறையத்தூர், இடையூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அடம்பூர் நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் திருப்புனவாசல்-ஆவுடையார்கோவில் சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 6 மாதத்திற்கு முன்பு போராட்டம் நடத்துவதாக வந்த பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் கூறினர்.

ஆனால் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து அங்கு வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் திருப்புனவாசல்-ஆவுடையார்கோவில் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments