Point Colimare எனும் கோடியக்கரை - கோடியக்காடு பகுதியில் “இஸ்லாமிய உறவுகள்”.. உள்ளம் குளிர்ந்த இந்துக்கள்!




“இஸ்லாமிய உறவுகள்”.. உள்ளம் குளிர்ந்த இந்துக்கள்! வடநாட்டுக்கு மதநல்லிணக்க பாடம் எடுக்கும் தமிழ்நாடு

நாகப்பட்டினம்: கோடியக்கரை கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு வருகை தரும் இந்து மத பக்தர்களை வரவேற்று இஸ்லாமியர்கள் வைத்து உள்ள பேனர் அப்பகுதியில் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்து இருக்கிறது.

இந்தியாவில் சாதி, மத அடிப்படையிலான வெறுப்பு பேச்சுக்களும் மத அடிப்படையிலான மோதல்களும் வன்முறைகளும் சிறுபான்மையின மக்கள் மீதான தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக மாட்டுக்காக மனிதர்களை அடித்துக் கொல்லும் குற்றங்கள், கும்பல் தாக்குதல்கள் போன்றவை அதிகரித்துள்ளன.

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற வட இந்திய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் நடைபெற்ற இத்தகைய கொடூரங்கள் தென் மாநிலமான கர்நாடகா வரை தலைவிரித்து ஆட தொடங்கிவிட்டன. இப்படிப்பட்ட சூழலிலும் தமிழ்நாடு மதநல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக தனித்துவமாக நின்று களமாடிக்கொண்டு இருக்கிறது.

தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே சில சாதி, மதவாத நிகழ்வுகள் நடந்தாலும் ஒப்பீட்டு அளவில் பிற மாநிலங்களைவிட உயர்ந்து நிற்கிறது தமிழ்நாடு. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவராக இருந்தாலும் மனிதர்களாகவும், தமிழர்களாக நாங்கள் ஒன்று என்று இந்தியாவுக்கே பாடமெடுத்து காட்டி வருகிறது தமிழ்நாடு. இதற்கு எடுத்துக்காட்டாக பல்வேறு மாவட்டங்களில் மதநல்லிணக்கத்தை உணர்த்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இந்துக்களும் முஸ்லிம்களும் மாமன் மச்சான் என்று உறவு முறை வைத்து அழைத்துக் கொள்ளும் அளவுக்கு பல நூற்றாண்டுகளாக நெருக்கமாக பழகி வருகிறார்கள். மசூதி, ஜமாத் நிகழ்வுகளில் இந்துக்களுக்கு அழைப்பு விடுத்து இஸ்லாமியர்கள் முக்கியத்துவம் கொடுப்பதும், கோயில் திருவிழாக்களில் இஸ்லாமியர்களுக்கு இந்துக்கள் முக்கியத்துவம் கொடுப்பதும் தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது நாகை மாவட்டம் கோடியக்கரையில் மதநல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வு அரங்கேறி உள்ளது. அங்கு உள்ள கோடிமுத்து மாரியம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேக விழா வரும் மே 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக அப்பகுதி மக்கள் தயாராகி வரும் நிலையில் கும்பாபிஷேகத்துக்கு வரும் மக்களை வரவேற்று இஸ்லாமியர்கள் பெரிய பேனரை வைத்து உள்ளார்கள்.

அதில், "இயற்கை எழில் கொஞ்சும் கடலும், காடுகளும், பறவைகளும், வன உயிரினங்களும், உப்பளங்களும் அமைய பெற்ற கோடியக்கரை - கோடியக்காடு. பாயிண்ட் காலிமர் எனும் நமது கோடியக்கரை அருகில் கோடிமுத்து மாரியம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேக விழாவுக்கு வருகைதரும் அனைவரையும் வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறோம். என்றும் அன்புடன் இஸ்லாமிய உறவுகள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மதம் கடந்து ஒற்றுமையை போற்றும் வகையில் இஸ்லாமியர்கள் கோயில் கும்பாபிஷேகத்துக்கு வரும் இந்துமத பக்தர்களை வரவேற்று வைக்கப்பட்டு உள்ள இந்த பேனர் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது. இதேபோல் கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் மசூதி திறப்பு விழாவுக்கு வரும் இஸ்லாமியர்களை வரவேற்று இந்துக்கள் பேனர்களை வைத்து இருந்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments