தாம்பரம்- செங்கோட்டை அதிவிரைவு ரெயிலை அதிராம்பட்டினம், பேராவூரணி ரெயில் நிலையங்களில் நிறுத்தி இயக்க வேண்டும் பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தல்
தாம்பரம்- செங்கோட்டை அதிவிரைவு ரெயிலை அதிராம்பட்டினம், பேராவூரணி ரெயில் நிலையங்களில் நிறுத்தி இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத் தலைவர் ஜெயராமன், செயலாளர் விவேகானந்தம் ஆகியோர் தெற்கு ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட மேலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தாம்பரம்- செங்கோட்டை எக்்ஸ்பிரஸ்

திருவாரூர்- பட்டுக்கோட்டை- காரைக்குடி அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக இந்த தடத்தில் 2012-ம் ஆண்டு சென்னைக்கான விரைவு ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.

அகல ரெயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு பல்வேறு போராட்டங்கள் மற்றும் தொடர் கோரிக்கை விளைவாக செகந்திராபாத்- ராமநாதபுரம் வாராந்திர விரைவு ரெயில், தாம்பரம்-செங்கோட்டை வாராந்திர அதிவிரைவு ரெயில் சென்னைக்கு தற்போது இயக்கப்படுகிறது. வருகிற ஜூன் முதல் தேதியிலிருந்து தாம்பரம்- செங்கோட்டை அதிவிரைவு ரெயில் வாரத்தில் மூன்று நாட்கள் இயங்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

பாதுகாப்பான பயணம்

இதில் செகந்திராபாத்- ராமநாதபுரம் விரைவு ரெயில் பேராவூரணி ரெயில் நிலையத்தில் நின்று செல்லவில்லை. தாம்பரம்- செங்கோட்டை அதிவிரைவு ரெயில் அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ரெயில் நிலையங்களில் நின்று செல்ல வில்லை.

பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி பகுதியில் இருந்து சென்னைக்கு கல்வி, மருத்துவம், வியாபாரம், அலுவலகப்பணிகள், குடும்ப தேவைகளுக்கு செல்வோர் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர்.

குறைந்த கட்டணம், பாதுகாப்பான பயணம், கழிவறை வசதிகள் உள்ளதால் ஏழை நடுத்தர மக்கள், முதியோர், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், பெண்கள், குழந்தைகள் பயணம் செய்ய ரெயில் வசதியாக உள்ளது.

இ்டம் கிடைப்பது சிரமம்

எனவே மேற்கண்ட விரைவு ரெயில்கள் அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ரெயில் நிலையங்களில் நின்று செல்ல தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கோட்டை -தாம்பரம் அதிவிரைவு ரெயில், ராமநாதபுரம்-செகந்திராபாத் விரைவு ரெயில் போன்ற தொலை தூர ரெயில்களில் சென்னைக்கு செல்ல முன்பதிவு மற்றும் முன்பதிவற்ற ரெயில் பெட்டிகளில் இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது.

எனவே அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் மானாமதுரையில் இருந்து காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக சென்னைக்கு தினசரி இரவு நேர மற்றும் பகல் நேர தினசரி விரைவு ரெயில்களை தெற்கு ரெயில்வே சார்பில் இயக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments