மீமிசல் அருகே முத்துக்குடா அலையாத்திக்காடு பகுதியில் படகு சவாரி உள்ளிட்ட வசதிகளுடன் சுற்றுலாத் தலமாக மேம்படுத்த ரூ.2.87 கோடிக்கு டெண்டர்






மீமிசல் அருகே முத்துக்குடாவில் படகு சவாரி உள்ளிட்ட வசதிகளுடன் சுற்றுலாத் தலமாக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.2.87 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகேயுள்ள முத்துக்குடாவில் நாட்டுப்படகு மீன்பிடி இறங்குதளம் உள்ளது. இங்கிருந்து 100-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தீவு போன்று காணப்படும் இப்பகுதியில் அலையாத்திக்காடு அமைந்துள்ளது. இங்கு லட்சக்கணக்கான பறவைகள் உள்ளன.

இந்நிலையில், இப்பகுதியை சுற்றுலாத்தலமாக மேம்படுத்துவது குறித்து ஆட்சியர் கவிதா ராமு, சுற்றுலாத் துறை அலுவலர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். பின்னர், இதற்கானசாத்தியக் கூறுகள் குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்பேரில், இப்பணிக்காக அரசு ரூ.2.87 கோடி நிதியை ஒதுக்கியது.

இதைத் தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலையோரம் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்தது. மேலும், அப்பகுதியில் தெருவிளக்கு, குடிநீர், படகு குழாம்அமைத்தல், கழிப்பறை வசதி ஏற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக சுற்றுலாத் துறை மூலம் ரூ.2.87கோடிக்கு கடந்த வாரம் டெண்டர் விடப்பட்டது.

இதையடுத்து, சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக சுற்றுலாத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மீனவர் எம்.ஆறுமுகம் கூறியது: நாட்டுப்படகு மூலம் தினசரி மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள மீனவர்களுக்கு பெரிய அளவில் வருமானம் கிடைப்பதில்லை.

தற்போது, அரசு சுற்றுலாத் தலமாக மாற்றுவதன் மூலம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் மேம்படும். குடிநீர் பிரச்சினை தீரும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

இதுகுறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜ்குமார் கூறியது: இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள முத்துக்குடாவில் அலையாத்திக்காடு 2 தீவுகளாக பிரிந்து உள்ளது. மேலும், காடுகளுக்கு இடையே படகுகள் செல்லும்வகையில் கால்வாய்களை அமைக்கும்போது, காட்டுப்பகுதியில் சில மணிநேரம் சுற்றிப் பார்க்கலாம். இங்கு லட்சக்கணக்கான பறவைகள் காணப்படுகின்றன. இவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும்.

மேலும், இத்திட்டத்தால் இப்பகுதியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு வசதிகள் மேம்படும். உள்ளூர் மீனவர்கள் பிடித்து வரும் மீன் வகைகள், நண்டுகளை மதிப்புக்கூட்டி விற்கும் வாய்ப்பு ஏற்படுவதால் உள்ளூர் மக்கள் பொருளாதார ரீதியாக மேம்படுவர். இதற்காகவே, அவற்றை மதிப்புக்கூட்டி விற்க மீனவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறோம். 

முத்துக்குடா சுற்றுலாத் தலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments