ரூ.3 கோடியில் முத்துக்குடா சுற்றுலா தல பணிகள் விரைவில் தொடக்கம்




ரூ.3 கோடியில் முத்துக்குடா சுற்றுலா தல பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

சுற்றுலா தலம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது முத்துக்குடா. இங்கு அலையாத்திகாடுகள் குறிப்பிட்ட பரப்பளவில் உள்ளது. இந்த பகுதியை சுற்றுலா தலமாக மாற்றி, படகு குழாம் அமைக்கவும், அலையாத்தி காடுகளை படகு மூலம் சுற்றிப்பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முத்துக்குடாவை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் இத்திட்டத்திற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கி அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து இத்திட்ட பணிகளுக்காக ஒப்பந்தம் விடப்பட்டு முடிந்துள்ளது. ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் முத்துக்குடா சுற்றுலா தல பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், ``முத்துக்குடா கடற்கரை பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் சுற்றுலா தலம் அமைக்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்துமிடம், பொழுது போக்கு பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்படும். படகுகள் நிறுத்துமிடமும் கடற்கரை பகுதியில் அமையும். அலையாத்திகாடுகளை படகில் சென்று சுற்றுலா பயணிகள் ரசிக்க முடியும்'' என்றனர்.

இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் பணிகளை விரைந்து தொடங்கி நிறைவேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பொழுதுபோக்கு அம்சத்துடன் சுற்றுலா தலம் என குறிப்பிடும் வகையில் பெரிய இடம் எதுவும் இல்லை. கடற்கரை பகுதியில் முத்துக்குடாவில் அமையும் சுற்றுலா தலம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments