ரூ.1,000-க்கு மேல் மின்கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு
ரூ.1,000-க்கு மேல் மின்கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின்கட்டணம் செலுத்தும் முறை

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின்நுகர்வோர்களிடம் இருந்து மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் ரூ.5 ஆயிரத்திற்கு மேல் கட்டணம் செலுத்தக்கூடிய நுகர்வோர்கள் ஆன்லைன் அல்லது வங்கி வரைவோலை (டிமாண்ட் டிராப்ட்) அல்லது காசோலை வழியாக செலுத்தும் நடைமுறை இருந்து வந்தது. \

அதற்கு கீழ் உள்ள தொகையை செலுத்த வேண்டியவர்கள் ஆன்லைன் மட்டுமின்றி நேரடியாகவும் மின்சார வாரிய அலுவலகங்களில் உள்ள கவுண்ட்டர்களில் நேரடியாக சென்று மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மின்வாரிய அலுவலகங்களில் பணி சுமையை குறைப்பதற்காக, நுகர்வோர்களால் கட்டக்கூடிய அதிகபட்ச கட்டணம் என்பது 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக கடந்த ஆண்டு குறைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது அது ரூ.1,000-மாக குறைக்கப்பட்டு உள்ளது.

இதற்கான பரிந்துரை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு, மின்சார வாரியம் சார்பில் அளிக்கப்பட்டு உள்ளது. ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் விரைவில் மின்வாரிய அலுவலகங்களில் செலுத்தக்கூடிய அதிகபட்ச கட்டணம் ரூ.1,000 ஆக குறைக்கப்படும்.

கவுண்ட்டர் ஊழியர்களுக்கு உத்தரவு

தமிழ்நாடு மின்சார ஊழியர்களின் தொழிற்சங்கத்தலைவர் ஒருவர் கூறும்போது, ‘ரூ.2 ஆயிரத்துக்கு மேல் மின்சார கட்டணம் செலுத்தும் நுகர்வோரை ஆன்லைன் முறையில் செலுத்துமாறு அறிவுறுத்த வேண்டும் என்று கவுண்ட்டர் ஊழியர்களுக்கு ஏற்கனவே மின்சார வாரிய அதிகாரிகள் வாய்வழி உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

கவுண்ட்டர் ஊழியர்களையும், கவுண்ட்டர்களின் எண்ணிக்கையையும் குறைக்க மின்சார வாரியம் அத்தகைய நடவடிக்கையை எடுத்து வருகிறது. ஏற்கனவே அனைத்து தொழிற்சாலை உள்ளிட்ட அதிகளவு மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் மின்சார கட்டணங்களை செலுத்துகின்றனர். ஒரே வளாகத்தில் பல பிரிவு அலுவலகங்களை அமைந்திருந்தாலும், ஒரு கட்டிடத்தில் ஒரு கவுண்ட்டர் மட்டுமே செயல்பட அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்' என்றனர்.

பொதுமக்கள் டிஜிட்டல் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு மாறி வருகின்றனர். எனவே பணம் செலுத்த நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக மின்கட்டணத்தையும் டிஜிட்டல் முறையில் செலுத்தும் முறையை ஏற்றுக்கொள்வார்கள் என்று அண்ணாசாலையில் உள்ள கவுண்ட்டர்களில் பணம் செலுத்த வந்த நுகர்வோர்கள் பலர் கூறுகின்றனர்.

பொதுமக்களிடம் கருத்து கேட்பு

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘வரைவு வினியோக குறியீட்டில் முன்மொழியப்பட்ட பணம் செலுத்தும் முறையில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால், 2 மாதங்களுக்கு 373 யூனிட்களை தாண்டிய மின்சார நுகர்வோர்கள் (ரூ.1,003.50) மின்சார வாரிய கவுண்ட்டர்களில் பணம் செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். டிஜிட்டல் முறை மூலம் மொத்த வருவாயில் 74 சதவீதத்தை மின்சார வாரியம் வசூலித்துள்ளது' என்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கூறும் போது, ‘மின்நுகர்வோர்களிடம் இதுகுறித்து கருத்து கேட்ட பின்னரே இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments