திருச்சியை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகத்தில் புதிய கோட்டம் உருவாக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு




கும்பகோணம் கோட்டத்திலிருந்து 5 மாவட்டங்களை பிரித்து திருச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய போக்குவரத்து கோட்டம் உருவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

போக்குவரத்து கழகம்

இந்தியாவின் முன்மாதிரி பஸ் போக்குவரத்து என்பது தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் என்பது வரலாறு. 1996-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும், சிறிய மாவட்டங்களாக இருந்தால் 2 மாவட்டங்களை சேர்த்து தனித்தனி போக்குவரத்து கழகங்கள் இருந்தன. அதாவது சென்னை மாநகராட்சிக்கு பல்லவன் போக்குவரத்து கழகம், விழுப்புரத்திற்கு தந்தை பெரியார், சேலத்திற்கு அண்ணா, திருச்சிக்கு தீரன் சின்னமலை, புதுக்கோட்டைக்கு வீரன் அழகு முத்துக்கோன், கோயம்புத்தூருக்கு சேரன், கும்பகோணத்திற்கு சோழன், மதுரைக்கு பாண்டியன், திருநெல்வேலிக்கு கட்டபொம்மன் என்று கிட்டத்தட்ட 17 போக்குவரத்து கழகங்கள் இருந்தன. இது தவிர நீண்டதூர பஸ்களுக்கு திருவள்ளுவர் மற்றும் ராஜீவ் காந்தி போக்குவரத்து கழகங்கள் இருந்தன. போக்குவரத்து கழகங்களுக்கு பெயர் வைப்பதில் எழுந்த பிரச்சினைகள் மற்றும் போக்குவரத்து கழகங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் 1996-ம் ஆண்டு அன்றைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் கருணாநிதி அவற்றின் பெயர்களை மாற்றி அதன் கட்டமைப்பை சீரமைத்தார்.

அதன்படி நீண்ட தூர பஸ்களை "அரசு விரைவு போக்குவரத்து கழகம்" என்றும், பல்லவன் போக்குவரத்து கழகமானது மாநகர போக்குவரத்து கழகம் என்றும் மாற்றப்பட்டது. இது தவிர, எம்.ஜி.ஆர்., தந்தை பெரியார், பட்டுக்கோட்டை அழகிரி போக்குவரத்து கழகங்கள் இணைக்கப்பட்டு, அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் என்றும், அண்ணா, அன்னை சத்யா போக்குவரத்து கழகங்கள் இணைக்கப்பட்டு, அரசு போக்குவரத்து கழகம், சேலம் என்றும், பாரதியார், சேரன், ஜீவா போக்குவரத்து கழகங்கள் இணைக்கப்பட்டு, அரசு போக்குவரத்து கழகம், கோயம்புத்தூர் என்றும், பாண்டியன், வீரன் சுந்தரலிங்கம், ராணி மங்கம்மாள் போக்குவரத்து கழகங்கள் இணைக்கப்பட்டு, அரசு போக்குவரத்து கழகம், மதுரை என்றும், கட்டபொம்மன், நேசமணி போக்குவரத்து கழகங்கள் இணைக்கப்பட்டு, அரசு போக்குவரத்து கழகம், திருநெல்வேலி என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கும்பகோணம் கோட்டம் உதயம்

இந்நேரத்தில், திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கிய தீரன் சின்னமலை, புதுக்கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய வீரன் அழகு முத்துக்கோன், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிய சோழன் போக்குவரத்து கழகங்கள் இணைக்கப்பட்டு, அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அரசு போக்குவரத்து கழகம், திருச்சி என்று வரும் என எதிர்பார்த்த நிலையில் அப்போதைய கும்பகோணம் அமைச்சர் கோசி.மணி அவர்களின் கோரிக்கையால் அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் என்று கும்பகோணத்தை தலைமையிடமாகக்கொண்டு அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தின் கீழ் கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, கரூர், நாகை ஆகிய 6 மண்டலங்கள் உள்ளன. இந்த கோட்டத்தின் கட்டுப்பாட்டில், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து சுமார் 3,645 வழித்தடங்களில் 1,257 டவுன் பஸ்கள், 1,927 புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த கும்பகோணம் கோட்டமே தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என தென்னிந்திய மாநிலங்களை காட்டிலும் மிகப்பெரிய அரசு போக்குவரத்து கழக கோட்டம் ஆகும். தமிழ்நாட்டில் இயங்கும் அரசு போக்குவரத்து கழகங்களிலேயே இக்கோட்டத்தின் தலைமையிடம் மட்டுமே ஒரு மாவட்டத்தின் தலைமையிடத்தில் அமையாமல் இருக்கிறது.

நீண்ட கால கோரிக்கை

கும்பகோணம் கோட்டம் உருவான போது, பெயரில் என்ன இருக்கிறது? என்று திருச்சி மக்களும் பெருந்தன்மையாக விட்டுவிட்டனர். கும்பகோணம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு அதன்பின்னர்தான் நிறைய போக்குவரத்து வசதிகள் கிடைக்கப்பெற்றன. ஆனால் திருச்சிக்கு போதுமான வசதிகள் கிடைக்கப்பெறவில்லை என்றும், இதனால் அரசு போக்குவரத்து கழகத்தில் தமிழகத்திலேயே மிகப்பெரிய கோட்டமாக விளங்கும் கும்பகோணத்திலிருந்து சில மாவட்டங்களை பிரித்து, திருச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டத்தை உருவாக்க வேண்டும் என்று திருச்சி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

அதன் அடிப்படையில் 2014-15-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் படி கும்பகோணம் கோட்டத்தை பிரித்து ஸ்ரீரங்கத்தை தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டம் உருவாக்கப்படும் என்று அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். அதன்பிறகு காட்சிகள் மாறின. அமைச்சர்களும் மாறினர். அதற்குப்பிறகு இந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டது. இதனால் திருச்சி மக்களின் கோரிக்கை கானல் நீராகவே இருந்து வருகிறது. இந்த சூழலில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் தனி போக்குவரத்து கோட்டம் என்ற கோரிக்கையை மக்கள் எழுப்பி வருகின்றனர்.

புறக்கணிக்கப்படும் திருச்சி

இதுகுறித்து சமூக ஆர்வலர் சம்சுதீன் கூறும்போது, ``தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் தனி போக்குவரத்து கோட்டம் இருப்பதால், அங்கு பொது போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள் நன்றாக உள்ளன. கும்பகோணம் கோட்டம் என்பது தஞ்சை மாவட்டத்தின் ஒரு தாலுகாவை தலைமையிடமாக கொண்டு உள்ளது. தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள திருச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டம் உருவாக்க வேண்டும். ஓட்டை, உடைசல், காயலான்கடைக்கு செல்லும் பஸ்கள் திருச்சிக்கு தள்ளிவிடப்படுகின்றன. திருச்சிக்கு புதிய பஸ்கள் இல்லை. புதிய வழித்தடங்கள் இல்லை. திருச்சி மாவட்டத்தில் ஏதேனும் ஒரு கோரிக்கை என்றால், அது கிடப்பில் போடப்படுகிறது. இதனால் திருச்சி புறக்கணிக்கப்படுகிறது. இதனால், அதிக இடங்களுக்கு பஸ்கள் விடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. குறிப்பாக கும்பகோணம் கோட்டத்திலேயே திருச்சி மண்டலம் தான் அதிக வருமானம் தரக்கூடியதாக உள்ளது. எனவே, திருச்சியை சேர்ந்த அமைச்சர்கள் நிச்சயம் திருச்சிக்கென தனி கோட்டத்தை பெற்றுத்தருவார்கள் என நம்புகிறோம்'' என்றார்.

தேவையற்ற ஒன்று

இதுகுறித்து அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களின் நலசங்க மாநிலச்செயலாளர் என்.மணி கூறும்போது, "தற்போது அரசு போக்குவரத்து கழகத்தில் 8 கோட்டங்கள் உள்ளன. ஏற்கனவே போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. 1 கிலோ மீட்டருக்கு ரூ.20 செலவாகிறது. ஆனால் அதற்கு தகுந்தவாறு பஸ்கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால் பல பஸ்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. ஏற்கனவே ஓய்வூதியர்களுக்கு பணப்பலன்கள் வழங்க முடியாமல் இருக்கிறார்கள். கொரோனா காலத்தில் ஓய்வு பெறும் வயதை 60 ஆக மாற்றியதால் தற்போது தான் அந்த ஆண்டுகளில் ஓய்வு பெற வேண்டியவர்கள் ஓய்வு பெற்று வருகிறார்கள். இதனால் பல பணிமனைகளில் பஸ்களை இயக்க ஆட்கள் இல்லாமல் உள்ளனர். புதிதாக யாரையும் பணிநியமனம் செய்யவில்லை. புதிதாக கோட்டத்தை உருவாக்கினால், அதிகாரிகள் அளவில் நிர்வாக இயக்குனர் உள்பட 5 பேர் நியமிக்க வேண்டும். அவர்களுக்கு ஊதியம், வாகனம் என்று கூடுதல் செலவுதான் ஏற்படும். ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் போக்குவரத்து கழகத்துக்கு இது தேவையற்ற ஒன்று" என்றார்.

புதிய வழித்தடங்கள் கிடைக்கும்

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் எம்.சுப்பிரமணியன் கூறும்போது, "தென் இந்தியாவிலேயே மிகப்பெரிய பஸ் போக்குவரத்து கோட்டம் கும்பகோணம் கோட்டம் என்பதால் இதை இரண்டாக பிரித்து திருச்சியில் ஒரு கோட்டம் அமைக்கலாம். கும்பகோணம் கோட்டம் என்பது கடைகோடியில் உள்ளது. எனவே திருச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டம் உருவாக்கினால் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள், புதிய வழித்தடங்கள் கிடைக்கும். மேலும் சிறு நகரங்களில் கூட புதிதாக பணிமனை அமைக்கவும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் மக்களுக்கு பயன்தான். ஏதேனும் கோரிக்கைக்கைக்காக கும்பகோணம் வரை அலையும் அலைச்சல் மிச்சமாகும்'' என்றார்.

அரசுதான் முடிவெடுக்க வேண்டும்

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ``அரசு போக்குவரத்து கழகம் ஏற்கனவே கடும் நிதிச்சுமையில் சிக்கி தவிக்கிறது. இந்த புதிய கோட்டங்கள் உருவாக்கப்பட்டால் அதற்கான அலுவலகம், பணியாளர்கள், பராமரிப்பு உள்ளிட்டவற்றால் கூடுதல் செலவினங்கள் ஏற்படும். இதனால் புதிய கோட்டம் உருவாகும் வாய்ப்பு குறைவு. ஆனால், 2 ஆயிரம் பஸ்களுக்கு மேல் உள்ள கோட்டங்களை 2 ஆக பிரிக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டு தான் முதற்கட்டமாக மதுரையை பிரித்து திருநெல்வேலி கோட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி பார்த்தால் கும்பகோணம் கோட்டத்தில் 3 ஆயிரம் பஸ்களுக்கு மேல் இயக்கப்படுகின்றன. இந்த கோட்டம் பெரிய கோட்டமாக இருப்பதால் அதை இரண்டாக பிரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. அரசுதான் இதுபற்றி முடிவெடுக்க வேண்டும்'' என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments