புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 மையங்களில் ‘நீட்’ தேர்வை 3,289 மாணவ-மாணவிகள் எழுதினர் 62 பேர் தேர்வு எழுதவரவில்லை ‘நீட்’ தேர்வு எளிதாக இருந்தது மாணவ-மாணவிகள் கருத்து




புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 மையங்களில் நடந்த நீட் தேர்வை 3,289 மாணவ-மாணவிகள் எழுதினர். 62 பேர் தேர்வு எழுதவரவில்லை.

`நீட்’ தேர்வு

மருத்துவப்படிப்புக்குரிய நுழைவுத்தேர்வான `நீட்' தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் எம்.என்.எஸ்.கே. என்ஜினீயரிங் கல்லூரி, எம்.ஆர்.எம். இன்டர்நேஷனல் பள்ளி, மவுன்ட் சீேயான் இன்டர்நேஷனல் பள்ளி, அறந்தாங்கி லாரல் மேல்நிலைப்பள்ளி, சேக் பாத்திமா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாய் லாரல் பள்ளி, டாக்டர்ஸ் பப்ளிக் பள்ளி ஆகிய 7 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. மாவட்டத்தில் `நீட்' தேர்வை எழுத மொத்தம் 3 ஆயிரத்து 351 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து ஏற்கனவே நுழைவுச்சீட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் மாணவ-மாணவிகள் போதுமான விழிப்புணர்வுடன் அதனை கடைப்பிடித்து தேர்வு மையங்களுக்கு நேற்று வந்திருந்ததை காணமுடிந்தது. இதற்கு முன்பு `நீட்' தேர்வு நடைபெற்ற போது மாணவ-மாணவிகள் சரிவர கடைப்பிடிக்காமல் அவசர, அவசரமாக தேர்வு மையங்கள் முன்பு காதணிகள், சங்கிலிகள், ரப்பர் பேண்ட் உள்ளிட்ட அணிகலன்களை கழற்றுவதை வாடிக்கையாக இருந்தது. ஆனால் நேற்று அதுபோன்று பெரும்பாலும் இல்லை. ஒரு சிலர் மட்டும் அணிந்து வந்திருந்தனர். அதனை கழற்றி தங்களது பெற்றோரிடம் கொடுத்தனர்.

பலத்த சோதனை

புதுக்கோட்டை அருகே சிவபுரம் எம்.ஆர்.எம். இன்டர்நேஷனல் பள்ளி மையத்தில் `நீட்' தேர்வை எழுத மாணவ-மாணவிகள் நேற்று காலையிலே வரத்தொடங்கினர். தேர்வு மையத்திற்குள் காலை 11.30 மணிக்கு மேல் மாணவ-மாணவிகள் பலத்த சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகளை அவர்களது பெற்றோர், உறவினர் வாழ்த்தி வழியனுப்பினர். தேர்வு மையத்திற்குள் மாணவ-மாணவிகளுக்கு முக கவசம் வழங்கப்பட்டது.

தேர்வு மையத்திற்குள் கடைசியாக மதியம் 1.30 மணி வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது கடைசியாக வந்தவர்கள் வேகமாக ஓடிச்சென்று தேர்வு மையத்திற்குள் சென்றனர். இதேபோல தேர்வு எழுதுபவர்கள் 2 புகைப்படம் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சிலர் புகைப்படம் கொண்டுவரவில்லை. இதனால் அவர்களுக்காக அங்கேயே புகைப்படம் எடுத்து உடனடியாக வினியோகிக்கும் வசதி முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால் அவர்கள் அவசர, அவசரமாக புகைப்படம் எடுத்ததை காணமுடிந்தது.

3,289 மாணவ-மாணவிகள் எழுதினர்

இந்த நிலையில் தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு முடிவடைந்தது. தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர். அவர்களுக்காக தேர்வு மையத்தின் வெளியே காத்திருந்த பெற்றோர்கள் தங்களது மகன், மகளிடம் தேர்வு எளிதாக இருந்ததா? நன்றாக எழுதிருயிருக்காயா? என ஆவலுடன் கேட்டனர். அதற்கு மாணவ-மாணவிகளும் தாங்கள் தேர்வு எழுதிய விவரத்தை கூறினர்.

மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துகளை கூறியபடி வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

7 மையங்களில் நடந்த நீட் தேர்வை 3 ஆயிரத்து 289 மாணவ-மாணவிகள் எழுதினர். 62 பேர் தேர்வு எழுதவரவில்லை.

நீட் தேர்வு நடைபெற்ற மையங்கள் முன்பு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். தேர்வு நடைபெற்றதை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

அறந்தாங்கியில் 4 இடங்களில் நடைபெற்ற `நீட்' தேர்வை 1,464 மாணவ-மாணவிகள் எழுதினர்.

08/05/2023
`நீட் தேர்வு எளிதாக இருந்தது என்று மாணவ-மாணவிகள் கூறினர்.

இதுகுறித்து மாணவ-மாணவிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

எளிதாக இருந்தது

புதுக்கோட்டையை சேர்ந்த நவீனா:- ``நான் நீட் தேர்வை முதன் முறையாக எழுதுகிறேன். தற்போது தான் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி முடித்தேன். நீட் தேர்வுக்காக சிறப்பு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றேன். தேர்வு எனக்கு எளிதாக இருந்தது. பயாலஜியில் கேள்விகள் மிகவும் எளிதாக இருந்தது. இயற்பியல், வேதியியல் பிரிவிலும் கொஞ்ச கேள்விகள் எளிதாக இருந்தது. இதனால் தேர்வை நல்ல முறையில் எழுதியுள்ளேன். என்னை பொறுத்தவரை தேர்வு எளிதாக இருந்தது.''

அறந்தாங்கியை சேர்ந்த ஹரீஷ்:- ``இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய 4 பாடப்பிரிவுகளில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில் இயற்பியல் கேள்விகள் மட்டும் சற்று கடினமாக தெரிந்தது. மற்றப்பாடப்பிரிவுகளில் உள்ள கேள்விகள் எளிதாக இருந்தது. முதன்முறையாக தேர்வு எழுதுபவர்களுக்கே இத்தேர்வு எளிதாக இருந்த நிலையில் ரீபிட்டர்களான அதாவது ஏற்கனவே ஒரு முறை எழுதி தற்போது மற்றொரு முறை தேர்வு எழுதுபவர்களுக்கு இத்தேர்வு மிகவும் எளிதாக இருந்திருக்கும்''.

கேள்வி கடினமாக இல்லை

அரிமளத்தை சேர்ந்த தமிழரசி:- ``நான் அரசு பள்ளியில் தான் படித்தேன். பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவடைந்த பின் கடந்த 1 மாதமாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றேன். தேர்வுக்காக அதிகாலையில் எழுந்து கடினமாக படித்தேன். தேர்வில் கேள்விகள் எளிதாக இருந்தது. அதனால் தேர்வை எளிதாக எழுதினேன். பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் எழுதியுள்ளேன். இந்த முறை தேர்வு எளிதாக இருந்ததாக எல்லோரும் கூறுகின்றனர்.''

அறந்தாங்கியை சேர்ந்த சந்தோஷ்:- ``பெரும்பாலும் பாடங்களில் இருந்து படித்த கேள்விகள் தான் இத்தேர்வில் கேட்கப்பட்டிருந்தது. அதனால் தேர்வை எளிதாக எழுத முடிந்தது. கேள்விகள் கடினமாக கேட்கப்படவில்லை. ஆனால் சரியாக படிக்காதவர்களுக்கு தேர்வு எளிதாக இருந்திருக்காது. இத்தேர்வுக்காக ஓராண்டு முழுவதும் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் மிகவும் எளிதாக எழுதியிருப்பார்கள்.''








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments