முத்துப்பேட்டை அருகே அரசு பஸ், வாய்க்காலில் பாய்ந்ததில் 54 பேர் காயம்
முத்துப்பேட்டை அருகே அரசு பஸ், வாய்க்காலில் பாய்ந்ததில் 54 பேர் காயம் அடைந்தனர்.

அரசு பஸ், வாய்க்காலில் பாய்ந்தது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தொண்டியக்காடு நோக்கி நேற்று அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

முத்துப்பேட்டையை அடுத்த பாண்டி கடைத்தெரு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த பஸ் திடீரென சாலையோரம் உள்ள வாய்க்காலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

54 பேர் காயம்

இந்த விபத்தில் பஸ்சை ஓட்டிவந்த திருப்பத்தூரை சேர்ந்த சிவபாலன் (வயது 48), கண்டக்டர் மாங்குடியை சேர்ந்த இளங்கோ(51), பெரியநாயகிபுரம் வாசுகி(70), கற்பகநாதர்குளம் அனுசியா(20), மேலப்பெருமழை கபிலயா(10), குன்னலூர் சுவேதா(18), அருள்மணி (52), கணேஷ்மணி(12), ரம்யா(17), வினோதினி(19), சுவேதா(17), வேதரெத்தினம்(58), மணலி சுசிலா(65), மகாலட்சுமி (45), கீழபெருமழை முருகையன்(58), கோபிகா(18), பெரியசாமி(70), இடும்பாவனம் கலைவாணி(60), வேதரெத்தினம்(58), பாலமுருகன்(35), ரேவதி(16), ஆனந்தவள்ளி(60), ராஜகோபால்(72), எக்கல் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி(60), மேலவாடியக்காடு ராஜகோபால்(55), லீலா(13), கீழப்பாண்டி நாகூரான்(50), சுரேகா(16), தொண்டியக்காடு மல்லிகா(32), விளாங்காடு கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்(45) உள்பட 54 பேர் காயம் அடைந்தனர். இதில் 39 பேர் பெண்கள் ஆவர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

பஸ் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பஸ்சில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 5 ஆண்கள், 5 பெண்கள் உள்பட 10 பேர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து எடையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments