பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம் தமிழக அமைச்சரவையில் மாற்றம் டி.ஆர்.பி.ராஜா அமைச்சர் ஆகிறார் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டார். டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்து, 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழக அமைச்சரவையில் 3 மாற்றங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார்.

இலாகா மாற்றம்

முதலாவதாக, ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்து துறை எடுக்கப்பட்டு, அமைச்சர் சிவசங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜகண்ணப்பனிடம் வழங்கப்பட்டது.

அதன் பின்னர், சில மாதங்களில் 2-வது முறையாக மிகப்பெரிய அளவில் இலாகா மாற்றத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். அப்போது, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், மெய்யநாதன், ராமச்சந்திரன், மதிவேந்தன் உள்ளிட்ட சிலரது இலாகாக்கள் மாற்றி வழங்கப்பட்டன.

டி.ஆர்.பி.ராஜா சேர்ப்பு

அந்தவகையில், இதுவரை அமைச்சர்களுக்கு இலாகா மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. மேலும் அமைச்சரவையில் புதிதாக உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை வழங்கப்பட்டது. இந்த அமைச்சரவை மாற்றம் நடைபெற்ற சில மாதங்களுக்குள் மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி, பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது அரசியல் ரீதியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், அமைச்சரவையில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா சேர்க்கப்பட்டுள்ளார்.

நாளை பதவி ஏற்பு

இதுகுறித்து கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் இருந்து நேற்று வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரான டி.ஆர்.பி. ராஜாவை அமைச்சரவையில் சேர்க்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் பரிந்துரைத்தார். அந்த பரிந்துரையை கவர்னர் ஏற்றுக்கொண்டுள்ளார். அதன்படி, அவருக்கு அளிக்கப்பட்ட துறைக்கான அமைச்சராக டி.ஆர்.பி. ராஜா நாளை (11-ந்தேதி) காலை 10.30 மணிக்கு கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இருக்கும் தர்பார் அரங்கில் பதவி ஏற்றுக்கொள்வார்.

மேலும் பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசரை அந்த பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் பரிந்துரைத்திருந்தார். அந்த பரிந்துரையையும் கவர்னர் அங்கீகரித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இலாகா என்ன?

டி.ஆர்.பி.ராஜா நாளை பதவி ஏற்றப்பிறகு அவருக்கான இலாகா தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும். அப்போது, அவருக்கான இலாகா என்ன? என்பது தெரியவரும். அதோடு மற்ற அமைச்சர்கள் யார்? யாருக்கு? என்ன இலாகாக்கள் மாற்றி வழங்கப்பட்டுள்ளன என்ற விவரமும் தெரியவரும்.

தற்போதைய நிலவரப்படி தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை முதல்-அமைச்சருடன் சேர்த்து 35 ஆக உள்ளது. அமைச்சர் நாசர் நீக்கப்பட்டாலும், புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா சேர்க்கப்படுவதால் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் வராது.

வாழ்க்கை குறிப்பு

அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பி. ராஜா தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகன் ஆவார். இவர் 1976-ம் ஆண்டு ஜூலை 12-ந்தேதி பிறந்தார். தற்போது இவருக்கு 46 வயது ஆகிறது. இவருக்கு சர்மிளா என்ற மனைவியும், சூர்யா (17) என்ற மகனும், நிலா ராஜா (15) என்ற மகளும் உள்ளனர்.

இவர், சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பையும், சென்னை பல்கலைக்கழகம் உளவியல் அறிவியல் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்தவர். இவருக்கு கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றார்.

தொடர்ந்து 2016, 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி வாகை சூடி மன்னார்குடி தொகுதியில் ‘ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தார். தி.மு.க.வில் தற்போது தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளராக இருக்கிறார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments