புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளி வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? பெற்றோர்கள், ஆசிரியர்கள் கருத்து




புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலும் கிராமப்புறப்பகுதியாகும். நகராட்சியாக புதுக்கோட்டை நகரம், அறந்தாங்கி நகரம் காணப்படுகிறது. மாவட்டத்தில் பெரும்பாலும் மாணவ-மாணவிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தான் படித்து வருகின்றனர். இதேபோல அவர்களது பெற்றோரின் பொருளாதார வசதிக்கேற்ப தனியார் பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.

1,500-க்கும் மேற்பட்ட பள்ளிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் என 1,500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளது. இதில் சுமார் 2½ லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஏழை, எளிய மக்கள் முதல் அனைத்து தரப்பு மக்களின் குழந்தைகளும் அரசு பள்ளிகளில் படித்து வருவதால் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

அதில் கொரோனா காலக்கட்டத்திற்கு பின் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கான அடிப்படை வசதிகள், கல்வியின் தரம், வகுப்பறை, பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம் போன்றவை எப்படி இருக்கின்றன என்பது பற்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

போதுமான கட்டிட வசதி இல்லை

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் மா.குமரேசன்:- ``கொரோனா காலக்கட்டத்திற்கு பின் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிகளில் கழிவறை வசதி இருந்தாலும், போதுமான அளவிலும், சுகாதாரமாக இல்லை. அதனை சுத்தப்படுத்த பணியாளர்கள் இல்லை. மாணவ-மாணவிகளை வைத்து சுத்தப்படுத்தினாலும் அதுவும் விமர்சனமாகி விடுகிறது. குடிநீர் வசதியை பொறுத்தவரையில் பெரும்பாலான பள்ளிகளில் உள்ளது. அதிலும் தற்போதைய மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகப்படுத்த வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வினியோகிக்க வேண்டும். இதேபோல பெரும்பாலான அரசு பள்ளிகளில் கட்டிட வசதி போதுமான அளவு இல்லை. ஒரு வகுப்பறையில் மாணவ-மாணவிகள் இட நெருக்கடியுடன் தான் அமர வைக்கப்படுகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை. மேலும் ஆசிரியர்களுக்கு அலுவலக பணி தான் அதிகமாக உள்ளது. மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்தல் பணி என்பது குறைந்து கொண்டே செல்கிறது. செயலியில் பதிவேற்றம் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ள சொல்வதால் கற்பித்தல் பணியில் சுணக்கம் ஏற்படுகிறது. இவையெல்லாம் தீர்க்கப்பட வேண்டியவை.''

கூடுதல் வசதிகள் தேவை

கறம்பக்குடி, இலைகடிவிடுதி அரசு நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் காசிவிஜயன்:- நாட்டின் எதிர்கால தூண்களான பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அரசு செய்து வருகிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் போதுமான கழிவறைகளை அரசு செய்து கொடுத்துள்ளது. அதனை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர்களும் உள்ளனர். ஆனால் தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. எனவே கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். மேலும் அவர்களின் ஊதியத்தை அந்தந்த மாதங்களில் வழங்க வேண்டும். மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின்கள் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. அதனை முறையாக எரியூட்டக் கூடிய வசதியுடன் கழிவறைகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிவறைகள் கட்ட வேண்டும். குடிநீர் வசதிக்காக பெரும்பாலான பள்ளிகளில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் பல பள்ளிகளில் அவை செயல்படாமல் உள்ளது. இவற்றை சீரமைக்க வேண்டும். தொடக்கப் பள்ளிகள் தொடங்கி, மேல்நிலை கல்வி வரை மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். கற்றல் மேம்பாட்டிற்காக அரசு அதிக நிதி ஒதுக்கி வருவது பாராட்டுக்குரியது. இதுபோல் பள்ளி கட்டமைப்பை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அடிப்படை வசதிகள்

புதுக்கோட்டையை சேர்ந்த சித்ரா:- அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் நன்றாக உள்ளது. அதனால் தான் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கிறோம். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் கல்வியின் தரத்தில் வந்துவிட்டது. இதனால் தான் மாணவ-மாணவிகளும் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர். கல்வியின் தரம் நன்றாக இருந்தாலும் அடிப்படை வசதிகளில் அரசு பள்ளிகளில் குறைகள் உள்ளது. சில பள்ளிகளில் பாதுகாப்பான முறையில் சுற்றுச்சுவர் இல்லாதது, கழிவறைகள் சுத்தமாக இல்லாதது, வகுப்பறைகளுக்கான போதுமான கட்டிட வசதி இல்லாதது, பழமையான கட்டிடங்கள் சேதம் அடைந்து காணப்படுவது என்பது இருக்கிறது. இதனையெல்லாலம் சரி செய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் கட்டமைப்புகளிலும் அரசு பள்ளிகளின் தரம் மேலும் உயரும்.

மாணவர்கள் சிரமம்

அன்னவாசலை சேர்ந்த தேன்ஆனந்தி:- அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்திற்குள்ளேயே அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியும் உள்ளது. ஆனால் இந்த பள்ளியில் போதிய கழிவறை வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் முதலில் செல்லும் மாணவர்கள் மட்டும் கழிவறையை பயன்படுத்துவதாகவும், பின்னர் செல்லும் மாணவர்கள் திறந்த வெளியில், கழிவறையாக சுற்றியுள்ள பகுதிகளில் இயற்கை உபாதைகளை கழிக்க செல்கின்றனர். எனவே பள்ளியில் போதுமான கழிவறைகளை கட்டிக்கொடுக்க வேண்டும்.

கழிவறை வசதி கிடையாது

கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அல் ரிஸ்வி:- எங்கள் பள்ளியில் குடிநீர் வசதி நல்ல நிலையில் உள்ளது. ஆனால் மாணவர்களுக்கு போதுமான கழிவறை வசதி கிடையாது. அதுபோல பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் வெளி ஆட்கள் அடிக்கடி பள்ளி வளாகத்திற்குள் வருகின்றனர். இதனால் தமிழக அரசு பள்ளிக்கு கழிவறை வசதியும் பள்ளியை சுற்றி சுற்றுச்சுவரும் கட்டித்தர வேண்டும்.

பராமரிக்க பணியாளர்கள் நியமிக்க வேண்டும்

விராலிமலையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் பெரியசாமி:- அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிவறை வசதி மற்றும் தூய்மையான குடிநீர் வசதி ஆகியவை பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பயனடைந்து வருகின்றனர். சில நாட்கள் பயனுள்ளதாக இருந்தாலும், அதன் பிறகு போதிய பராமரிப்பு இல்லாததால் அதனை மாணவர்கள் பயன்படுத்துவதில் மிகவும் சிரமப்படுகின்றனர். அவ்வப்போது பள்ளியின் சார்பில் கழிவறை மற்றும் குடிநீர் தொட்டிகளை தூய்மை செய்து வந்தாலும் சில நேரங்களில் தூய்மைப் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காததால் அதனை அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் அசுத்தமான குடிநீரை குடிக்கவும் சுகாதாரமற்ற கழிவறையை பயன்படுத்தும் நிலைக்கும் மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். சில நேரங்களில் மாணவர்கள் பள்ளிக்கு அருகே உள்ள திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் கழிக்க பயன்படுத்தும் நிலையும் உள்ளது. அதுமட்டுமின்றி சில பள்ளிகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கும் நிலையில் கழிவறை எண்ணிக்கை என்பது குறைந்த அளவே உள்ளது. எனவே கழிவறை மற்றும் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பணியாளர்களை நியமித்தால் மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments