விடாமுயற்சிக்கு முன்னுதாரணம் "ஏம்பல்'!
'2025-இல் வளர்ந்த ஏம்பல் வட்டாரம்' என்பதை முழக்கமாகக் கொண்டு, 2017-இல் தொடங்கப்பட்ட, 'ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுமம்' என்ற (வாட்ஸ் ஆஃப் குழு), நடைமுறைப்படுத்தி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடி எல்லையில் இருக்கிறது. 'ஏம்பல்' கிராமம். வருவாய்த் துறையின்படி, 'ஏம்பல் குறுவட்டம்' (பிர்கா). மறுஎல்லையில் சிவகங்கை மாவட்டம். ஏம்பல் குறுவட்டத்தில், ஏம்பல், மதகம், குருங்களூர், இரும்பாநாடு ஆகிய 5 ஊராட்சிகளில் 52 குக்கிராமங்கள்.

2017-இல் ஏம்பலைச் சேர்ந்த எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 32 கி.மீ. தொலைவு பயணித்து அறந்தாங்கிக்குச் சென்று தேர்வு எழுத வேண்டும். அந்த நிலையை மாற்ற வேண்டும் என அந்தப் பகுதியைச் சேர்ந்த (அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள்) இளைஞர்கள் இணைந்து தொடங்கியதுதான் 'ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுமம்'.

அப்போதைய மாவட்ட ஆட்சியர் கணேஷ், ஐஏஎஸ் அதிகாரி அமுதா உள்ளிட்டோரிடம் முறையிட்டு, ஏம்பலிலேயே தேர்வு மையத்தைப் பெற்றிருக்கின்றனர். அதன்பிறகு, '2025-இல் வளர்ந்த ஏம்பல் வட்டாரம்' என்ற முழக்கம் கருவாகி, ஆலோசனைக் குழு, களப்பணிக் குழு, கொடையாளர் குழு எனப் பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன.

சுகாதாரம், க ல்வி, நீர்நிலை மேம்பாடு, சாலை வசதி, மின் கட்டமைப்பு மேம்பாடு, நூலகம், வங்கிக் கிளை, பேருந்து வசதி உள்ளிட்டவற்றில் தன்னிறைவடைவதுதான் குழும நோக்கங்களாயின.ஏம்பலில் இருந்த அரசு கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொடையாளர்களிடமிருந்து நிதி திரட்டி, பிரசவக் கட்டடம், சுற்றுச்சுவர், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன், எக்ஸ்ரே இயந்திரம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

2019-20-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் நிதி ரூ. 2.34 கோடியில் 10 கண்மாய்கள் சீரமைப்பு, 2020-21-இல் ரூ. 52 லட்சத்தில் 3 குளங்கள் சீரமைப்பு, 2021-22-இல் ரூ. 1.5 லட்சத்தில் 3 கண்மாய்கள் சீரமைப்பு, நடைப்பயிற்சித் தளங்கள் அமைப்பு போன்றவை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இங்குள்ள நூலகத்தை ரூ. 15 லட்சம் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய கட்டடம் கட்டி, நூல்களைத் தாராளமாக அடுக்கி வைப்பதற்கான அடுக்குகள் வாங்கப்பட்டுள்ளன. மின் நூலகமும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஏம்பலில் உள்ள அனைத்து கிராமச் சாலைகளும் பல்வேறு அரசு நிதி பெறப்பட்டு தார்ச் சாலைகள் ஆகியிருக்கின்றன. புதுக்கோட்டை - ஏம்பல்- ஆவுடையார்கோவில் சாலை ரூ. 30 கோடியில் இருவழிச் சாலையானது.

44 கடைகளுடன் ஏம்பல் வாரச்சந்தை கட்டப்பட்டது. அரசுத் தொடக்கப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கூடுதல் வகுப்பறைகள் உள்ளிட்ட மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஏம்பல் உள்ளிட்ட கிராமங்களை இணைக்கும் வகையில் திருச்சி- ராமேசுவரத்துக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து, ஏம்பலில் இருந்து சென்னைக்கு புதிய அரசுப் பேருந்து கிடைக்கப் பெற்றிருக்கிறது. ஏம்பல் குறுவட்டத்தில் 16 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிதாக சித்த மருத்துவப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இத்தனைக்கும் ஏம்பல் வளர்ச்சிக் குழுமத்தினரின் இடையறாத அழுத்தம், தொய்வில்லாத முயற்சியைத் தாண்டி சில நுட்பமான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
குழும ஒருங்கிணைப்பாளர் பி. பேரின்பநாதன், சிங்கப்பூரிலுள்ள அமெரிக்க தனியார் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் வட்டாரத் தலைமையகத்தின் மூத்த திட்ட மேலாளராகப் பணியாற்றி வருகிறார். வெளிநாட்டில் இருந்தபோதும், ஏம்பல்தான் அவரது உடல், பொருள், ஆவி அத்தனையும்! என்னென்ன தேவை என்பதை வரையறுத்து, ஒவ்வொன்றாக உரிய அலுவலர்களுக்கு மின்னஞ்சல் செய்வதோடு நிற்பதில்லை. இங்குதான் இருக்கிறது அந்தத் தொழில்நுட்பம்(!).

அரசுத் துறை அலுவலருக்கு மின்னஞ்சலை அனுப்பி, நிர்வகிக்கும் தொடர்பு கொண்டு சொல்லிவிடுவார். அடுத்த நாள் அந்த அலுவலரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்வார். இதேபோலத்தான் பல்வேறு துறை அலுவலர்களிடம் மின்னஞ்சல் மற்றும் 'வாட்ஸ் ஆஃப்' தொடர்பில் இருப்பார்.

மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளை நேரில் சென்று சந்திப்பார்கள். அவர்களிடம் அளிக்கப்படும் மனுக்கள், அடுத்து எந்த அலுவலர் மேசையில் இருக்கிறது என்பதையும் சிங்கப்பூரில் இருந்தே கண்காணிக்கிறார் பேரின்பநாதன்.

கேட்ட கேள்விகள், அதற்கு- மேலும், கீழும்- என அதிகாரிகள் கொடுத்த பதில்கள் அத்தனையையும் பேரின்பநாதன் 'அப்டேட்' செய்திருப்பார். அதில் ஏதேனும் சிக்கல் என்றால் குழுமத்தின் வாட்ஸ் ஆஃப் குழுவில் பகிரப்படும். சரி செய்யக் கோருவார். வேண்டுகோள் விடுப்பார். புண்ணியமாகப் போகும் என்றும் சொல்வார். மெல்லக் கடிந்தும் கொள்வார். தவறுகளை குழுவிலேயே தயங்காமல் சுட்டிக்காட்டுவார். வேலை நடக்கும்போது, தாராளமாகப் பாராட்டி நன்றி சொல்வார்.

ஒருமுறை உயர் அலுவலர் ஒருவர் இவரது வாட்ஸ் ஆஃப் எண்ணை பிளாக் செய்துவிட- அடுத்த நாள் அவரது தொலைபேசியில் தொடர்பு கொண்டு- ஏன் இப்படிச் செய்தீர்கள், முதலில் பிளாக்கை எடுத்துவிடுங்கள் என அன்புடன்- அழுத்தத்துடன் கேட்டு, மீண்டும் முதலில் இருந்து தொடங்கியிருக்கிறார் பேரின்பநாதன். இது குறித்து அவரிடம் கேட்டபோது:

'தயக்கமின்றி செயல்படுகிறோம். பொதுப்பணிக்குதான் போராடுகிறோம். அசராமல் சண்டையும் போடுகிறோம். வேறுவழியில்லை.

எம்.பி.க்கள் எம்எம். அப்துல்லா, கார்த்தி சிதம்பரம், சு. திருநாவுக்கரசர், நவாஸ்கனி, எம்.எல்.ஏ.க்கள் தி. ராமச்சந்திரன், மா. சின்னதுரை, வை. முத்துராஜா உள்ளிட்டோரை தொடர்ந்து கொண்டு வருகிறோம். பரிந்துரைக் கடிதம் அவர்கள் அனுப்புவதை, எங்களுக்கும் அனுப்புவார்கள். அதனையும் இணைத்து அரசுக்கு தனியே நாங்கள் கடிதம் எழுதுவோம்.

விடாமுயற்சிதான் வெற்றிகளைத் தருகிறது. 2025-க்குள் வளர்ந்த ஏம்பல் வட்டாரம், என்ற எங்கள் நோக்கம் நிறைவேறும் வரை போராடுவோம்.

ஏம்பலில் 500 மகளிர் பயன்பெறும் வகையில் 'ஜவுளிப் பூங்கா', அரசு ஐடிஐ, தஞ்சை, மதுரைக்கு நேரடி பேருந்து வசதி என எதிர்காலத் திட்டத்துடன் அரசின் கதவுகளைத் தட்டத் தொடங்கியிருக்கிறோம். வெற்றி பெறுவோம்'' என்றார்.

நன்றி : தினமணி 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments