தேனியில் அலுவலகத்துக்குள் நுழைந்து ஊராட்சிகள் உதவி இயக்குனரை முற்றுகையிட்ட பொதுமக்கள்




தேனியில், ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்துக்குள் நுழைந்து, உதவி இயக்குனரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

தேனி பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் உள்ளது. அதில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் செயல்படுகிறது. இந்த வளாகத்துக்கு ஆண்டிப்பட்டி ஒன்றியம் திருமலாபுரம் கிராம ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வந்தனர். ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்துக்குள் அந்த மக்கள் திடீரென நுழைந்தனர்.

அப்போது அங்கு உதவி இயக்குனர் அண்ணாதுரை பணியில் இருந்தார். அவரை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர். அவர்களிடம் உதவி இயக்குனர் விசாரணை நடத்தினார்.

வாக்குவாதம்

அப்போது பொதுமக்கள், 'திருமலாபுரம் ஊராட்சியில் முறைகேடு நடந்துள்ளதாக அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே ஊராட்சி மன்ற தலைவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கள் ஊருக்கு குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. அதை சரி செய்ய வேண்டும். தினமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரை அங்கேயே காத்திருப்போம்' என்றனர்.

1 மணி நேரத்துக்கும் மேல் இந்த போராட்டம் நீடித்தது. வேறு அலுவலர்கள் செல்ல முடியாத அளவுக்கு பொதுமக்கள் அலுவலகத்துக்குள் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். உதவி இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் அவர்கள் ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், வருகிற 12-ந்தேதிக்குள் ஊராட்சியில் நடந்த முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி இயக்குனர் உறுதி அளித்தார். அதன்பிறகு மக்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments