திருச்சியில் ரசிகர் கூட்டத்தை திரட்டி மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வாலிபரால் போக்குவரத்து பாதிப்பு சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ; ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்த போலீசார்
திருச்சியில் ரசிகர் கூட்டத்தை திரட்டி மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வாலிபரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சமூக வலைதளத்தில் வைரலான வீடியோவால் அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவருக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்

திருச்சி சுப்ரமணியபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் முகமதுஅசாருதீன் (வயது 24). இவர் மோட்டார் சைக்கிளை அசாத்தியமாக ஓட்டி அதனை யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். முகமதுஅசாருதீன் வைத்திருக்கும் எஸ்,1000ஆர்.ஆர். வகை மோட்டார் சைக்கிளின் விலை ரூ.20 லட்சம் ஆகும். இதனால் இளைஞர்களின் ஆதரவு இவருக்கு அதிகம் உண்டு.

பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசனை தொடர்ந்து முகமதுஅசாருதீனுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகிறது. இதனால் தனது ரசிகர்களை சந்திக்க திட்டமிட்ட முகமதுஅசாருதீன் திருச்சியில் உள்ள கோர்ட்டு சாலையில் எம்.ஜி.ஆர். சிலை அருகே கடந்த 13-ந்தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை சந்திக்க போவதாக அறிவித்தார்.

திரண்ட ரசிகர்கள்

முகமதுஅசாருதீனையும், அவர் வைத்திருக்கும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளையும் காணும் ஆசையில் அவருடைய ரசிகர்கள் அங்கு குவிந்தனர். குறித்த நேரத்துக்கு மோட்டார் சைக்கிளுடன் வந்த முகமதுஅசாருதீனுடன், அங்கு திரண்டு இருந்த இளைஞர்கள் போட்டி போட்டு தங்கள் செல்போனில் செல்பி எடுத்தனர்.

பின்னர் அங்கிருந்து தில்லைநகர் வரை மோட்டார் சைக்கிளில் அவர் சாகசம் செய்தபடி செல்ல, அவருடைய ரசிகர்களும், இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் சத்தமிட்டபடி அதிவேகமாக ஊர்வலம் போல் சென்றனர். மேலும், சிறுவர்களும் அவரை பின்தொடர்ந்து ஓடிச்சென்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ரூ.11 ஆயிரம் அபராதம்

சுமார் 100 பேருடன் சாகசம் செய்தபடி மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றதுடன் அதனை இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளத்தில் முகமதுஅசாருதீன் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபற்றி அறிந்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா, மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த முகமதுஅசாருதீன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.

அதன்பேரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, அனுமதி இல்லாமல் கூடி ஊர்வலம் சென்றது, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை இயக்கியது, மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர் மீது திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்தார். அத்துடன், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அவருக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments