பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ்-ரெயில் கட்டண சலுகை படிவம் வழங்க ஏற்பாடு





பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ்-ரெயில் கட்டண சலுகை படிவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் திலகம் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

தஞ்சை மாவட்டம் பேராவூரணி, பட்டுக்கோட்டை, மதுக்கூர், சேதுபாவாசத்திரம் பகுதி மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் பெறுவதற்காக கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் மாற்றுத்திறனாளிகள், அவரது உறவினர்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் மேனகா தலைமையில், மாவட்ட துணைச்செயலாளர் சி.ஏ. சந்திரபிரகாஷ், மதுக்கூர் ஒன்றியத்தலைவர் பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை ஒன்றியப்பொறுப்பாளர் மணிகண்டன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கடந்த 26-ந்தேதி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தலைமை டாக்டர் அன்பழகன், முட நீக்கியல் துறை டாக்டர் கலைச்செல்வன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அப்போது அங்கு ஆய்வு பணிக்காக வந்த

சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் திலகம், மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பஸ்-ரெயில் பயண கட்டண சலுகை

அப்போது பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிலேயே ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான பஸ், ரெயில் பயண கட்டண சலுகை விண்ணப்பத்தை பரிசீலித்து கையெழுத்திட்டு வழங்குமாறு டாக்டர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் அங்கிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பயண கட்டண சலுகைக்கான கையெழுத்திடப்பட்ட படிவத்தை சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரதி வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று பஸ், ரெயில் பயண கட்டண சலுகை படிவம், டாக்டர் கையெழுத்திட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஆண்டுக்கு ஒருமுறை

தமிழ்நாடு அரசு பஸ்கள் மற்றும் மத்திய அரசின் ரெயில்களில் பயணம் செய்ய மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் பாதுகாவலர்களும் கட்டண சலுகையில் பயணிக்கலாம். இதற்காக டாக்டர்கள் உரிய விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு வழங்கினால் மட்டுமே இந்த கட்டணச்சலுகை பெற முடியும் நிலை உள்ளது. இந்த விண்ணப்பம் ஆண்டுக்கு ஒரு முறை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments