அசாம் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்; கவுகாத்தி - நியூ ஜல்பைகுதிரி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
வடகிழக்கு பிராந்தியத்தின் முதலாவது ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்

அதிநவீன சொகுசு வசதிகளுடன் கூடிய ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில்களை பிரதமர் மோடி அடுத்தடுத்து தொடங்கிவைத்து வருகிறார். இந்நிலையில், வடகிழக்கு பிராந்தியத்தில் முதல் முறையாக இந்த ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டது

அசாம் மாநிலம் கவுகாத்தியையும், மேற்கு வங்காள மாநிலம் நியூ ஜல்பைகுரியையும் இணைக்கும் இந்த ரெயிலின் அறிமுக விழா நேற்று கவுகாத்தி ரெயில் நிலையத்தில் நடந்தது.

ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், அசாம் மாநில கவர்னர் குலாப்சந்த் கட்டாரியா, முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிரதமர் மோடி, டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பச்சைக்கொடி அசைத்து ரெயில் போக்குவரத்தை தொடங்கிவைத்தார்.

பயண நேரம் குறையும்

கவுகாத்தி-நியூ ஜல்பைகுரி இடையிலான பயண தூரத்தை அடைய தற்போது 6½ மணி நேரம் ஆகிறது. வந்தே பாரத் ரெயில், இந்த தூரத்தை 5½ மணி நேரத்தில் சென்றடையும்.

மின்மயமாக்கப்பட்ட 182 கி.மீ. ரெயில் பாதையையும், அசாம் மாநிலம் லம்டிங்கில் கட்டப்பட்ட ‘மெமு’ ரெயில் பணிமனையையும் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

வடகிழக்கு பிராந்தியம் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி புறக்கணிக்கப்பட்டு வந்தது. 9 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம், தொலைபேசி, ரெயில் போன்ற வசதிகள் இல்லாமல் இருந்தவர்கள், வடகிழக்கு மாநிலங்களின் மக்கள்தான்.

உள்கட்டமைப்பு

ஆனால், கடந்த 9 ஆண்டுகளில், புதிய இந்தியாவை கட்டமைக்கும் நோக்கத்தில், முன்எப்போதும் இல்லாத வளர்ச்சி பணிகளும், எண்ணற்ற சாதனைகளும் நிகழ்த்தப்பட்டன. அதில் அதிகம் பயன் அடைந்தவை வடகிழக்கு மாநிலங்கள்தான்.

அனைவருக்கும் பாகுபாடின்றி உள்கட்டமைப்பு கிடைப்பதுதான் உண்மையான சமூக நீதியையும், மதச்சார்பின்மையையும் பிரதிபலிக்கும்.

கடந்த 9 ஆண்டுகளில், புதிய ரெயில் பாதைகள் முன்பை விட 3 மடங்கு வேகத்திலும், இரட்டை ரெயில் பாதைகள் முன்பை விட 9 மடங்கு வேகத்திலும் போடப்பட்டன.

வேலைவாய்ப்பு

தற்போது தொடங்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரெயில், கவுகாத்தி-நியூ ஜல்பைகுரி இடையிலான நூற்றாண்டு கால தொடர்பை மேலும் வலுப்படுத்தும். சுற்றுலா, வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகியவை பெருக உதவும்.

இந்த அரசு, எப்போதும் ஏழைகள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும். புதிதாக திறக்கப்பட்ட நாடாளுமன்றம், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஜனநாயக வரலாற்றையும், எதிர்கால இந்தியாவின் வளமான ஜனநாயகத்தையும் இணைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments