ஆலங்குடி அருகே பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் உயர் கல்வி படிக்க முடியாமல் வறுமையில் தவிக்கும் மாணவி; அரசு உதவிக்கரம் நீட்ட கோரிக்கை!



பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் உயர் கல்வி படிக்க முடியாமல் வறுமையில் தவிக்கும் மாணவிக்கு அரசு உதவிக்கரம் நீட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கல்லாலங்குடி ஊராட்சிக்குட்பட்ட கலிபுல்லா நகரை சேர்ந்தவர் வளர்மதி-குமாரராஜா. இவர்களுக்கு வர்ஷினி (வயது 17), ஹாசினி (12) என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் வர்ஷினி தற்போது ஆலங்குடியில் உள்ள அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 478 மதிப்பெண் எடுத்துள்ளார். ஹாசினி மனவளர்ச்சி குன்றிய நிலையில் சரியாக பேசக்கூட முடியாத சூழ்நிலையில் உள்ளார். வர்ஷினி 4-ம் வகுப்பு படிக்கும் போதே அவரது தாய் வளர்மதி இறந்து விட்டார். வளர்மதி இறந்த ஒரு ஆண்டிலேயே குமாரராஜா வர்ஷினி, ஹாசினியையும் பிரிந்து சென்று விட்டார். தாய் இறந்த நிலையில், தந்தையும் விட்டு சென்றதால் அரவணைக்க யாரும் இன்றி வர்ஷினி, ஹாசினியும் நிற்கதியாக நின்றனர். 

இதையடுத்து இவர்களது சித்தியான மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் சக்திவேல் இவர்களை அரவணைத்தனர். மகேஸ்வரி-சக்திவேல் ஆகியோருக்கு திருமணமாகி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகக் கூடிய நிலையில் இந்த 2 பெண் குழந்தைகளை வளர்ப்பதற்காக தங்களுக்கு குழந்தைகளே வேண்டாம் என்று முடிவு எடுத்தனர். சக்திவேல்-மகேஸ்வரி ஆகியோர் கூலி வேலைக்கு சென்று அவர்களை காப்பாற்றி வந்தனர். இவர்கள் வீடும் எப்போ இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளது. 

எனவே தாய் இறந்த நிலையில், தந்தை இல்லாமல் சித்தியின் அரவணைப்பில் மனவளர்ச்சி குன்றிய தங்கையுடன் வறுமையின் விளிம்பில் தவிக்கும் வர்ஷினிக்கு உயர் கல்வி பயிலவும், வசிப்பதற்கு முறையான வீடு கட்டிக்கொடுக்கவும் தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments