புதுக்கோட்டை அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி 3 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்


புதுக்கோட்டை அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணிகளை 3 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
பொற்பனைக்கோட்டை

புதுக்கோட்டை அருகே அமைந்துள்ளது பொற்பனைக்கோட்டை கிராமம். இங்கு தொல்லியல் சார்ந்த இடங்கள் உள்ளது. சங்க கால கோட்டையானது தற்போது சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த கோட்டையானது 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் தொல்லியல் ஆய்வு கழகத்தினரும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இனியன் தலைமையிலான குழுவினரும் ஆய்வு மேற்கொண்ட போது அரிய பொருட்கள் கிடைத்தன. 

இதைத்தொடர்ந்து தமிழக அரசின் தொல்லியல் துறையே பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆய்வு கழகத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் தமிழக அரசின் தொல்லியல் துறையினர் அகழாய்வு மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டார். 
 
அகழாய்வு பணி தொடக்கம்

இதையடுத்து பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தமிழக நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கினார். 

நிகழ்ச்சியின் போது அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
பொற்பனைக்கோட்டை ஆகழாய்வு என்பது தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகும். சங்க காலத்தில் ஒரு வாழ்விட பகுதியாக பெரிய கொத்தளத்தோடு இருந்ததை முறைப்படி ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வின் முடிவில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எந்தளவுக்கு நாகரிகம் படைத்தவர்களாக, இந்த பகுதியில் ஒரு அரசாட்சியும், அங்கு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும். 

ஆயிரம் ஆண்டுகள் பழமை 

பொற்பனைக்கோட்டையின் தெற்கு பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் ரேடார் மூலம் அகழாய்வு பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பகுதியானது ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என அனுமானிக்கப்படுகிறது. இதனை நிரூபிக்க கூடிய வகையில் இந்த ஆய்வு அமையும். இந்த ஆய்வில் எடுக்கப்படும் பொருட்கள் எங்கு வைப்பது என்று பின்னர் முடிவெடுக்கப்படும். தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தொல்லியல் எச்சங்கள் அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தப்படும். அகழாய்வு பணிக்கு அதிகமான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும். இந்தியாவின் வரலாறு என்பது கங்கை சமவெளியில் இருந்து அல்ல, காவிரி கரையில் இருந்து, தமிழ்நாட்டில் இருந்து எழுதப்பட வேண்டும் என்பது தான் எங்களது குறிக்கோள். 

தொன்மையான மொழி 

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியக புனரமைப்பு பணிகள் முழுமையாக விரைவில் முடிக்கப்படும். தமிழர்களின் மொழி தொன்மையானது நீண்ட காலமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழின் தொன்மையானது இந்தியாவில் வேறு எந்த மொழியிலும் இல்லாதது. மிக மிக தொன்மையானது. காலத்தால் முற்பட்டது என முறையான ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்ட ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், அப்துல்லா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முத்துராஜா, சின்னத்துரை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தொல்லியல் துறை இயக்குனர் காந்தி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், திருவரங்குளம் ஒன்றியக்குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, தொல்லியல் ஆலோசகர் பேராசிரியர் ராஜன், பொற்பனைக்கோட்டை அகழாய்வு இயக்குனர் தங்கதுரை, தொல்லியல் ஆய்வாளர் மணிகண்டன் உள்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments