பொறுமை இழந்து கொந்தளித்த மக்கள்! கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் ஊராட்சி மன்றத்திற்கு பூட்டு போட்டு குப்பை, கழிவுநீரை கொட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!!நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடும் கணவரை கண்டித்து ஊராட்சி மன்றத்திற்கு பூட்டு போட்டு குப்பை மற்றும் கழிவுநீரை கொட்டி கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணி புரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் மலைபோல் குப்பைகள் குவிந்தும், சாக்கடைகள் நிறைந்தும், தரமற்ற சாலையும், சில தெருக்களில் சாலை வசதி இல்லாமலும் மற்றும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தெரு விளக்கு எரியாமல் இருளில் மூழ்கி உள்ளது. குப்பை மற்றும் சாக்கடையால் நோய் பரவும் அபாயமும், சரியான முறையில் சாலை வசதி இல்லாததால் அவசர காலத்திற்கு தெருவுக்குள் வாகனங்கள் வர முடியாத சூழலும், தெருவிளக்கு ஏரியாததால் இரவு நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.மேலும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் கணவர் தலையீடு இருந்து வருவதால் எந்த வேலையும் நடைபெறாமல் உள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து பல முறை ஊராட்சி மன்ற தலைவியிடம் மனு அளித்தும் எந்த பயனும் இல்லாத நிலையில் பொறுமை இழந்த மக்கள் இன்று 16/05/2023 காலை திடீரென்று ஊராட்சி மன்றம் நோக்கி திரண்டு வந்த மக்கள் ஊராட்சி மன்ற தலைவி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடும் கணவரை கண்டித்து ஊராட்சி மன்றத்திற்கு பூட்டு போட்டு பொதுமக்கள் கொண்டு வந்த குப்பை மற்றும் கழிவுநீரை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், 

ஊராட்சி மன்ற தலைவி மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் தலையிடும் கணவரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவம் குறித்து நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற செயலாளர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். 

இதனையடுத்து ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பிற அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொதுமக்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவி மீது ஊழல் குற்றச்சாட்டு, பொதுமக்கள் கொடுக்கும் மனு மீது நடவடிக்கை எடுப்பதில்லை, தரமற்ற முறையில் போடப்பட்டுள்ள சாலை, ஊர் முழுவதும் சூழ்ந்திருக்கும் குப்பைகள், தெருக்களில் நிரம்பி இருக்கும் சாக்கடைகள், எரியாத தெரு விளக்கு மற்றும் புதிய குடிநீர் குழாய் வழங்குவது, வீட்டு வரி ரசீது வழங்குவதில் ஊழல் என பல குறைகள் மற்றும் குற்றசாட்டுகளை முன் வைத்தனர்.

இதனையடுத்து குறைகள் மற்றும் குற்றசாட்டுகளை கேட்டறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அப்பகுதியை பார்வையிட்ட பின் தெருவிளக்கு நாளை சரி செய்து தரப்படும் என்றும், வரும் வாரத்திற்குள் குப்பைகள் அள்ளப்படும் என்றும் அதனை தொடர்ந்து மற்ற வேலைகள் செய்து தரப்படும் என்று வாக்குறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இந்த போராட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் குறிப்பிட்ட நாட்களுக்குள் வாக்குறுதிகளை செய்து தரவில்லை என்றால் குப்பைகளை ட்ரக்குகளில் ஏற்றிக்கொண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கொட்டி மாபெரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Post a Comment

0 Comments