‘‘மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்களுக்கு உரிய தீர்வு காண வேண்டும்’’ அதிகாரிகளுக்கு முதல் நாளிலே கலெக்டர் அதிரடி உத்தரவு!



மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்களுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் மெர்சி ரம்யா முதல் நாளிலே அதிரடி உத்தரவிட்டார்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக மெர்சி ரம்யா நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்ததால் அவர் நேரடியாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு சென்றார். அங்கு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார். மேலும் மனுக்களை சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அப்போது கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘‘பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உரிய தீர்வு காண வேண்டும். மனுக்களை நிலுவையில் வைத்திருக்க கூடாது. அவ்வாறு நிலுவையில் வைத்திருந்தால் உரிய காரணத்தை அடுத்து வருகிற கூட்டத்தில் முன்கூட்டியே அந்தந்த துறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். எந்த மனுவையும் நிராகரிக்காமல், நிலுவையில் வைக்காமல் அதிகபட்சம் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணுங்கள். முதல்வரின் முகவரி திட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்'' என்றார்.

கூட்டத்தில் இருந்து அவர் வெளியே வந்த போது அலுவலகத்தின் உள்ளே தரையில் அமர்ந்திருந்தவர்களிடம் கோரிக்கை மனு தொடர்பாக கேட்டறிந்தார். மேலும் வயதானவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் அமருவதற்கு இருக்கைகள் போடவும் கலெக்டர் மெர்சி ரம்யா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதேபோல மனுக்கள் பதிவு செய்யப்படும் இடத்தை பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை கேட்டறிந்தார். அப்போது மண்டபாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், மண் பாண்ட தொழிற்கூடம் அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை ஒருவர் அளித்தார். அந்த மனுவை பெற்று பயிற்சி கலெக்டர் ஜெயஸ்ரீயிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

இதேபோல மனுக்கள் பதிவு செய்யப்படும் இடத்தில் மனுக்கள் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது இந்த வாரம் பெறப்படும் மொத்த மனுக்கள் எத்தனை, அதில் எத்தனை மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பதை அடுத்த வாரம் கூட்டம் நடைபெறும் போது துறைவாரியாக தெரிவிக்க வேண்டும் என அங்கிருந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடா்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் பிரிவு அலுவலகங்களை பார்வையிட்டார். கலெக்டராக பொறுப்பேற்ற முதல் நாளிலே அவரது அதிரடி நடவடிக்கையால் அலுவலர்கள், ஊழியர்கள் மத்தியில் பரபரப்பாக காணப்பட்டது.

கூட்டத்தில் மொத்தம் 283 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.8,000 மதிப்புடைய மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களையும் மற்றும் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13,500 மதிப்புடைய தக்க செயலியுடன் கூடிய செல்போன்களையும் கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments