புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு செல்ல இரவு நேர ரயிலில் படுக்கை வசதி டிக்கெட் எண்ணிக்கையை உயா்த்த உரிய நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை!



புதுக்கோட்டை வழியே செல்லும் இரவு நேர சென்னை ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு கூடுதல் டிக்கெட்டுகளை முன்பதிவுக்கு ஒதுக்க வேண்டும் என ரயில் பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனா்.

புதுக்கோட்டை வழியாக சென்னைக்கு காரைக்குடியிலிருந்து பல்லவன், ராமேசுவரத்திலிருந்து போட்மெயில் மற்றும் சேது என 3 தினசரி ரயில்கள் உள்ளன.

இவையில்லாமல் வாரத்தில் 3 நாள்கள் செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு சிலம்பு ரயிலும் இயக்கப்படுகிறது. இதில் பல்லவனை தவிர மற்ற ரயில்களில் புதுகைப் பயணிகளுக்கு அத்தனை எளிதாகக் டிக்கெட் கிடைப்பதில்லை.

இதுகுறித்து புதுக்கோட்டை ரயில் பயணிகள் கூறியது:

சேது மற்றும் சிலம்பு ரயில்களுக்கு புதுக்கோட்டை ரயில் நிலையம் இடைநிறுத்தங்களுக்கான ஒதுக்கீட்டில் வருகிறது. சென்னையிலிருந்து வரும் சிலம்பு ரயிலுக்கு புதுக்கோட்டை வரை படுக்கை வசதிப் பெட்டியில் வெறும் 61 டிக்கெட்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து செங்கோட்டை வரை 248 டிக்கெட்கள் ஒதுக்கப்படுகின்றன. இதனால் சிலம்பு ரயிலில் சென்னையிலிருந்து புதுக்கோட்டை வரும் பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. எனவே, இந்த ரயிலில் டிக்கெட்டை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமெனில் 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது.

அல்லது கூடுதல் கட்டணம் கொடுத்து காரைக்குடி, சிவகங்கை ரயில் நிலையங்களுக்கு முன்பதிவு செய்து புதுக்கோட்டையில் இறங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் புதுக்கோட்டை ரயில் நிலைய பயணிகள் வருவாய் பாதிக்கப்படுகிறது.

இதேபோல ராமேசுவரம்- சென்னை இடையே சென்று வரும் சேது ரயிலில் மானாமதுரை முதல் திருச்சி வரை படுக்கை வசதி பெட்டியில் இரு மாா்க்கங்களிலும் வெறும் 79 டிக்கெட்கள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. அதே நேரத்தில் ராமேசுவரம் முதல் பரமக்குடி வரை 385 டிக்கெட்கள் ஒதுக்கப்படுகின்றன.

இதனால் புதுக்கோட்டை ரயில் நிலையப் பயணிகள் கூடுதல் கட்டணம் கொடுத்து பரமக்குடி ரயில் நிலையத்துக்கு முன்பதிவு செய்து புதுக்கோட்டையில் இறங்குகின்றனா்.

எனவே சென்னையிலிருந்து வரும் சென்னை எழும்பூா்- செங்கோட்டை சிலம்பு ரயிலுக்கு புதுக்கோட்டை வரை கூடுதலாக 35 டிக்கெட்களும், ராமேசுவரம்- சென்னை எழும்பூா் சேது ரயிலுக்கு மானாமதுரை- திருச்சி இடைப்பட்ட ரயில் நிலையங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் படுக்கை வசதி டிக்கெட்கள் எண்ணிக்கையை 79 லிருந்து 150 ஆகவும் உயா்த்த வேண்டும் என்கின்றனா் பயணிகள்.

தற்போது சென்னையில் வசிக்கும் புதுக்கோட்டை பயணிகள் புதுக்கோட்டை வழியாகச் செல்லும் இரவு நேர ரயில்களுக்கு டிக்கெட் கிடைக்காததால் 50 கிமீ பயணித்து திருச்சி மலைக்கோட்டை ரயிலையும் மற்றும் மங்களூா் ரயிலையும்தான் அதிகமாகப் பயன்படுத்துகின்றனா்.

இதனால் பொருள்களோடு சொந்த ஊருக்கு வரும் பயணிகள் மிகுந்த சிரமத்தை எதிா்கொள்கின்றனா். எனவே, மக்கள் பிரதிநிதிகள் புதுக்கோட்டை ரயில் பயணிகளுக்கு இரவு நேர ரயில்களில் எளிதில் டிக்கெட் கிடைக்கும் வகையில் சேது, சிலம்பு ரயில்களின் படுக்கை வசதி டிக்கெட் எண்ணிக்கையை உயா்த்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments