இந்தியா - சவுதி அரேபியா இடையே ரயில் பாதை ஹஜ் பயணத்தை எளிதாக்க புதிய திட்டம்





இந்தியா டூ மெக்காவுக்கு ரயிலில் ஹஜ் பயணம்! சவூதி அரேபியா வரை பிரம்மாண்ட ரயில் பாதை

டெல்லி: இந்தியாவில் இருந்து மெக்காவுக்கு ஹஜ் பயணம் செய்வோருக்கு வசதியாக சவூதி அரேபியா - இந்தியா இடையே ரயில்வே பாதை அமைப்பது தொடர்பாக இருநாட்டு அரசுகள் பேசி வருகின்றன.

ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து பல லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் சவூதி அரேபியாவின் புனித நகரான மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்வதற்காக வருகை தருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் லட்சக்கணக்கான யாத்திரிகர்கள் ஆண்டுதோறும் சவூதி அரேபியாவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் இந்திய ஹஜ் கமிட்டி மற்றும் தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலமாக விமானத்திலேயே ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர். இதற்காக பல லட்சங்களை அவர்கள் செலவழிக்கும் நிலை இருந்து வருகிறது. ஆண்டுதோறும் ஹஜ் பயணத்துக்கான கட்டணமும் லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது.

எனவே இதற்கான செலவை குறைக்கும் வகையில் விமானத்துக்கு மாற்றாக இந்தியாவில் இருந்து சவூதி அரேபியாவுக்கு நேரடி ரயில் சேவையை அறிமுகம் செய்யவும் இருநாடுகளும் ஆலோசித்து வருகிறார்கள். இம்மாத தொடக்கத்தில் சவூதி அரேபியாவுக்கு சென்ற இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார்.

சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சுல்லிவான், ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு ஆலோசகர் சேக் தனூன் ஆகியோருடன் இதுபற்றி அஜித் தோவல் ஜித்தாவில் ஆலோசித்து இருக்கிறார். அதில் ஹஜ் யாத்திரிகர்களுக்கு மட்டும் என்று இல்லாமல் முக்கிய வர்த்தக போக்குவரத்தையும் இந்த ரயில் பாதை மூலம் கொண்டு வர அப்போது ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக சவூதி அரேபியாவுடன் மட்டுமின்றி வளைகுடாவில் உள்ள மற்ற நாடுகளையும் இந்தியாவுடன் ரயில் வழியாக இணைப்பது பற்றி பேசி இருக்கிறார்கள். இந்த ரயில் பாதையை இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய துறைமுகங்களோடும் இணைக்கவும் ஆலோசித்து வருகிறார்கள். சீனாவும் தனது கனவு திட்டமான BRI எனப்படும் பெல்ட் மற்றும் ரோடு முன்னெடுப்பை வளைகுடா நாடுகளில் செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டுடன் இந்த ரயில்வே இணைப்பு திட்டம் பற்றிய பேச்சுக்கள் எழுந்து இருக்கின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற I2U2 குழுவின் கூட்டத்தில் இந்தியா - வளைகுடா நாடுகள் இணைப்பு திட்டத்துக்கான யோசனை தோன்றி இருக்கிறது. தற்போது நடைபெற்ற குவாட் கூட்டத்திலும் இதுபற்றி அலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், ரயில் மூலமாக இந்தியாவிலிருந்து - சவூதி அரேபியாவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். குறைவான கட்டணம் என்பதை கடந்து, விமானத்தை விட ரயிலில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் கிடைக்கும். வணக்க வழிபாடுகளை மேற்கொள்ளவும் முடியும்.

அதே நேரம் இதனை அமல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக இவ்வளவு பெரிய திட்டத்தை செயல்படுத்த மிகப்பெரிய நிதி தேவை. புவியியல் ரீதியாக மலைகள், பாலைவனங்கள், வனப்பகுதிகள், குடியிருப்புகள், நீர்நிலைகளை தாண்டி இந்த ரயில் பாதை அமைக்க வேண்டும். நிலம் கையகப்படுத்தல் சிக்கல்கள் உள்ளன. பல நாடுகளின் எல்லைகளை கடப்பதில் சிக்கல் உள்ளது. பாதுகாப்பு பிரச்சனைகளும் இருக்கின்றன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments