மீமிசல் பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்க கோரி பயணிகள்-பொதுமக்கள் கோரிக்கை!



மீமிசல் பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்க கோரி பயணிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கிழக்கு கடற்கரை சாலையில் மீமிசல் என்ற ஊர் உள்ளது. இந்த ஊரை சுற்றி அதிகமான கிராமங்கள் உள்ளது. மேலும் மீமிசல் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், தொண்டி மற்றும் மதுரை உள்ளிட்ட வெளியூர்களுக்கு தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வெளியூருக்கு சென்று வர சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினசரி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திசையன்விளை, தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மீமிசல் பேருந்து நிலையத்தில் இருந்து நேரடியாக கிளம்புகின்றன. இது தவிர இராமேஸ்வரம், இராமநாதபுரம், ஏர்வாடி, சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், களியாக்கவிளை, நாகர்கோவில், திருவனந்தபுரம், வேதாரண்யம், தஞ்சாவூர், கும்பகோணம், வேளாங்கன்னி, நாகப்பட்டினம், நாகூர், சிதம்பரம் ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் மீமிசல் வழியாகவே சென்று வருகின்றன. தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் மீமிசலை கடந்து செல்கின்றன.

தாய்மார்கள் பாலூட்டும் அறை

ஒரு தாய் தனது குழந்தையை எந்தவித நோயும் இன்றி நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ப்பதற்கு பிறந்த ஒரு வருடத்திற்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியமாகும். பழங்கால பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து ஆரோக்கியத்துடன் வளர்த்து வந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பாலூட்டும் தாய்மார்கள் பணி மற்றும் பயண நிமித்தம் காரணமாக வெளியே செல்லும்போது பஸ் நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

தங்கள் இருப்பிடத்தில் இருந்து பணிபுரியும் இடத்திற்கோ அல்லது தாங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கோ செல்ல சில மணி நேரங்கள் தேவைப்படும். தாங்கள் அணியும் ஆடை மற்றும் பல்வேறு இடையூறுகள் காரணமாக பொது இடத்தில் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இ்ந்த நிலையில் பஸ் நிலையங்களில் காத்திருக்கும் வேளையில் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு எந்தவித இடையூறும் இன்றி தனிமையில் வசதியாக பாலூட்டும் வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி பஸ் நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்பட்டு இயங்கி வந்தது.

இந்த அறையில் இருக்கைகள், மின்விசிறி, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. பஸ் நிலையங்களில் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு இது மிகுந்த வரப்பிரசாதமாக அமைந்தது.

இந்நிலையில் மீமிசல் பேருந்து நிலையத்தில் பாலூட்டும் அறை அமைத்தால் பாலூட்டும் தாய்மார்களுக்கு பயனடைவார்கள் என்பதே தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது.

மீமிசல் அருகே உள்ள தொண்டி பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments