ரெயில் பெட்டியை தாங்கும் அடிச்சட்டத்தில் விரிசல்: கொல்லம்-சென்னை ரெயில் விபத்தில் இருந்து தப்பியது செங்கோட்டையில் பரபரப்பு
செங்கோட்டையில் கொல்லம்-சென்னை ரெயிலில், ரெயில் பெட்டியை தாங்கும் அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டது. ஊழியர்கள் உடனடியாக கண்டுபிடித்ததால் அந்த ரெயில் விபத்தில் இருந்து தப்பியது.

கொல்லம்-சென்னை ரெயில்

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி ரெயில் (வண்டி எண் 16102) இயக்கப்படுகிறது. வழக்கம் போல் இந்த ரெயில் கொல்லத்தில் இருந்து நேற்று மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டது.

ரெயிலானது செங்கோட்டைக்கு மாலை 3 மணிக்கு வந்தது. ரெயில் நிலையத்துக்குள் நுழைவதற்கு முன்பாக தண்டவாளத்தின் இருபுறமும் ரெயில்வே ஊழியர்கள் அமர்ந்து வண்டியின் சக்கரங்கள் சரியாக ஓடுகிறதா? என்பதை கண்காணித்தனர்.

அடிச்சட்டத்தில் விரிசல்

அப்போது அந்த ரெயிலின் எஸ்-3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் சக்கரங்களுக்கு மேலே பொருத்தப்பட்டிருந்த அடிச்சட்டத்தில் (பெட்டியை தாங்கும் பகுதி) விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து அவர்கள் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ரெயில் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அதிகாரிகள் அங்கு வந்து அடிச்சட்டத்தில் விரிசல் இருப்பதை பார்வையிட்டனர்.

மாற்றுப்பெட்டி

பின்னர் அந்த ஒரு பெட்டி மட்டும் செங்கோட்டையில் கழற்றப்பட்டது. எஸ்-3 பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களுக்கு மதுரை ரெயில் நிலையத்தில் வைத்து மாற்றுப்பெட்டி இணைத்து அதில் பயணம் செய்ய ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சுமார் 1½ மணி நேரம் தாமதமாக அந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டது.

விபத்து தவிர்ப்பு

இந்த ரெயில் புனலூர்-செங்கோட்டை இடையே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குகைகள் பாதை வழியாக கடந்து வரும். அப்போது இந்த ரெயிலின் அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம். எனினும் அதிர்ஷ்டவசமாக ரெயில்வே ஊழியர்கள் கண்காணித்து கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஒடிசா மாநிலத்தில் ரெயில் கோர விபத்து அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தற்போது செங்கோட்டையில் நடந்த இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments