World Environment Day 2023: உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (ஜூன் 05)! இயற்கையை நாம் பாதுகாத்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும்!




உலக சுற்றுச்சூழல் தினம் (ஜூன் 5) இன்று கடைபிடிக்கப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1974-ம் ஆண்டு முதல் உலக சுற்றுச்சூழல் தினமானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

சூரிய குடும்பத்தில் பூமியில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். சிறப்பு மிக்க பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபை சார்பில் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வன உயிரினங்கள், வளிமண்டலம், பறவைகள், கடற்கரைகள் அனைத்தும் மனிதர்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் வாழ இன்றியமையாதது. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு சுற்றுச்சூழல் சமநிலையில் இருக்க வேண்டும்.

இந்த சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. ரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் போன்றவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுச் சூழலை மனிதர்கள் பாதுகாப்பது மிக முக்கியமாகும்.

மரங்கள் இல்லை என்றால் நாம் சுவாசிக்க காற்று கிடைக்காது. வெப்பநிலை பல மடங்கு உயரும் அபாயமும் உள்ளது. எனவே காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும். அதே நேரத்தில் ஒரு பகுதியில் கடும் வறட்சி, மற்றொரு பகுதியில் கடும் வெள்ளம், சூறாவளி இயற்கை சீற்றங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. இதனால் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை அதிகரிக்கிறது. இதனால் பனிப்பாறைகள் உருகி கடல்நீர்மட்டம் உயரும் ஆபத்து உள்ளது. 

மரம் நடுவது, காடுகள் வளர்ப்பது, மரபு சாரா ஆற்றல் மூலங்களை பயன்படுத்துவது, சுத்திகரிக்கப்பட்ட தொழிற்சாலை கழிவுகளை வெளியேற்றுவது, அதிக மாசுபாட்டை உண்டாக்கும் திட்டங்களை கைவிடுவது இவற்றால் மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மறுசீரமைப்பு செய்யவும் முடியும். எனவே மரம் நட்டி சுற்றுச்சூழலை பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் கடமை. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

நவீன வளர்ச்சி என்ற பெயரில் அதிகரித்த பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு காரணமாக பூமியின் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது. 'பிளாஸ்டிக் மாசுவுக்கு தீர்வு என்பது இந்தாண்டின் மையக்கருத்து

உலக சுற்றுச்சூழல் தினம், ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பூமியையும் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றி உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம்.

நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீர், காற்று, விண்வெளி, காடுகள், கடல்கள், விலங்கினங்கள், பறவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் சுற்றுச்சூழல். சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் என்பது, கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் அதிகம் பேசப்படும் ஒன்றாக இருந்து வருகின்றது. இதன் பின்னணியில் மனித நடவடிக்கைகளால் சுற்றுச்சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத்தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும் உள்ளன என்றே சொல்லலாம்.


பூமி என்பது நிலம், நீர், காற்று, வானம் ஆகிவற்றின் ஒட்டுமொத்த உருவ அமைப்பாகும். இவற்றில் ஏதேனும் ஒன்றில் மாற்றம் ஏற்பட்டாலும், அது அமைப்புகளின் சமநிலையை பாதிக்கும். இவ்வாறு மாறி வரும் சுற்றுச்சூழல், உயிரினங்களுக்கு மட்டுமின்றி மனிதனுக்கும் பாதிப்பாக அமையும்.

சுற்றுச்சூழல் மாசுபாடுக்கு முதல் காரணம் மனிதனுடைய சுயநலம்தான். மூன்றாம் தலைமுறை வாரிசுக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்று நினைக்கும் மனிதன், மூன்றாவது தலைமுறை வாரிசு வாழப்போகும் அக்காலத்தில் சுற்றுச்சூழலே அவர்களுக்கு எப்படி எதிரியாக மாறும் என்பதை அறிந்து கொள்ளவில்லை அல்லது அறிய விரும்பவில்லை. அதுவே சுற்றுச்சூழல் மாசுபாட்டின் முக்கிய காரணியாக உள்ளது.

உலகில் ஏற்படும் பல்வேறு வகை மாசுபாட்டிற்கு அடிப்படை ஆதாரம் மனிதனுடைய செயல் தான். சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் அறியாமல் மனிதன் செயல்படுத்தக் கூடிய ஒவ்வொரு செயலும் அவனது குலத்திற்கு எதிரானது என்பதை மனிதர்கள் இன்னும் அறியவில்லை.

தொழில் புரட்சியின் காரணமாக தான் சுற்றுச்சூழல் முதலில் மாசடைய ஆரம்பித்தது. தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகவும் அவசியமான, அவசரமான ஒன்றாக பார்க்கப்பட வேண்டும். கொடிய நஞ்சு கலந்த நீர்நிலைகள், சுவாசிக்க முடியாத பிராணவாயு, பாதுகாப்பு இல்லாத நிலம் என நாம் கவனம் செலுத்த வேண்டிய பிரச்னைகள் அதிகம் உள்ளன.

மனிதனால் உருவாக்கப்பட்ட பல்வேறு பொருட்களின் காரணமாக, நிலைமை இப்போது கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. பூமியில் சுற்றுச்சூழல் மாற்றத்தால் ஏற்பட்டுள்ள சேதமென்பது, மிகப்பெரியது. மட்டுமன்றி, நாமே நினைத்தால்கூட இப்போது பழையபடி சுற்றுச்சூழலை திரும்பப் பெற முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் நாம் இனி எவ்வளவு முயற்சி செய்தாலும், ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்ட அழிவை நாம் தவிர்க்க முடியாது.

வெயில் காலத்தில் மழையும், மழை பெய்யும் நேரத்தில் வெயிலும் வருவது தற்போது இயல்பாகி விட்டது. உண்மையில், இது மிகப்பெரிய ஒரு பிரச்னை. பருவநிலை மாற்றதிற்கும் மனிதனாகிய ஒவ்வொருவரும் தான் காரணம். நாம் இங்கு நன்றாக வாழ வேண்டும் என்றால் பூமியை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். மாற்றம் என்பது ஒவ்வொரு தனிநபராலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஏனெனில் இயற்கை என்பது நம் குடும்பம். அதை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது.

இயற்கையை நாம் பாதுகாத்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும்.
இவ்வருடம் இத்தினத்துக்கான நோக்கமாக இருப்பது, Beat Plastic Pollution என்பதாகும். இவ்வருடம், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம், பூமியை காப்போம்!










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments