பெரம்பலூரில் அதிகாலையில் வேன்-டிராக்டர் மோதிய விபத்தில் சிக்கியவர்களை மீட்ட ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பஸ் மோதியதில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவிலுக்கு சென்று திரும்பினர்
திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). நெசவு தொழிலாளியான இவர் தனது குடும்பத்தினர், உறவினர்கள் என மொத்தம் 10 பேருடன் சேர்ந்து தனது குலதெய்வ கோவிலான திருவண்ணாமலை மாவட்டம், படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு ஒரு வேனில் சென்றார். நேற்று முன்தினம் காலை அவர்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று, சாமி தரிசனம் செய்து விட்டு, பின்னர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து இரவில் அவர்கள், அதே வேனில் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
வேனை டிரைவரான அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ்(55) ஓட்டினார். நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் அந்த வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் விழுப்புரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த டிராக்டரை வேன் டிரைவர் முந்த முயன்றார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதியது.
6 பேர் படுகாயம்
இதில் டிராக்டர் சாலையின் இடது பக்கத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் வேன் சாலையின் மைய தடுப்புச்சுவரில் ஏறி நின்றது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த குப்புசாமி, அவரது மகன் கணேசன் (42), கோபாலின் மனைவி நீலாவதி (65) மற்றும் டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா, சாமிபட்டியை சேர்ந்த சாமிதாஸ் (45), டிராக்டரில் வந்த முதுகளத்தூர் தாலுகா, பொந்தம்புளியை சேர்ந்த சேகர் (40), திலகன் (42) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர்.
இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இந்த விபத்து குறித்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது.
ஆம்புலன்ஸ் மீது மோதல்
ஆம்புலன்ஸ் டிரைவர் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (45), சாலையில் ஆம்புலன்சை திருப்பி நிறுத்திவிட்டு, விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக, ஸ்டிரெச்சர் மூலம் ஆம்புலன்சில் ஏற்றும் பணியில் ஈடுபட்டார். படுகாயமடைந்த குப்புசாமியை ஆம்புலன்சில் ஏற்றுவதற்கு வேனில் வந்த சுப்ரமணியின் மகளும், ஆடிட்டர் அலுவலகத்தில் பணிபுரிந்தவருமான கவிப்பிரியா (22) உதவி செய்தார். அப்போது அதே சாலையில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி பயணிகளுடன் வேகமாக ஒரு ஆம்னி பஸ் வந்தது. அந்த பஸ்சை டிரைவர் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா, குப்பக்குறிச்சியை சேர்ந்த சுடலை (42) என்பவர் ஓட்டி வந்தார். அந்த ஆம்னி பஸ் திடீரென சாலையின் மைய தடுப்புச்சுவரில் ஏறி வந்து சாலையின் மறுபுறம் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது பயங்கரமாக மோதியது.
3 பேர் பலி
இதில் ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேந்திரன், குப்புசாமி, கவிப்பிரியா ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் ஆம்னி பஸ் மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் சினிமா பாணியில் அந்தரத்தில் பறந்து சாலையோரம் உள்ள அரிசி ஆலை சுற்றுச்சுவரில் மோதி, மழைநீர் வடிகாலில் விழுந்தது. இதில் சுற்றுச்சுவர் விழுந்து சேதமடைந்தது. இந்த விபத்தை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஆம்னி பஸ்சில் வந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்தில் உயிரிழந்த ராஜேந்திரன், குப்புசாமி, கவிப்பிரியா ஆகியோரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டனர்
விபத்து நடந்த இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்கும் பணியை துரிதப்படுத்தினார். பின்னர் கிரேன் உதவியுடன் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
விபத்தில் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை கலெக்டர் கற்பகம் நேரில் வந்து பார்வையிட்டு நலம் விசாரித்ததோடு, நன்கு சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன், ஆம்னி பஸ் ஆகியவற்றின் டிரைவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆம்புலன்ஸ் டிரைவரின் உறவினர்கள் மறியல்
விபத்தில் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேந்திரன் உயிரிழந்தது சக ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் மருத்துவமனையில் ராஜேந்திரன் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க செய்தது. விபத்தில் இறந்த ராஜேந்திரன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி அவரது குடும்பத்தினர், உறவினர்கள் திடீரென்று மருத்துவமனை அருகே பெரம்பலூர்-துறையூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, பெரம்பலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களால் முடிந்ததை செய்து தருகிறோம் என்று கூறியதை தொடர்ந்து, அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
திருட்டுபோன டிராக்டரை மீட்டு வந்தபோது விபத்து
விபத்தில் சிக்கிய புதிய டிராக்டர், ராமநாதபுரம் மாவட்டத்தில் திருட்டு போயுள்ளது. இதையடுத்து அந்த டிராக்டரை விழுப்புரம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். டிராக்டரை மீட்டு வருவதற்காக ராமநாதபுரம் மாவட்ட போலீசாருடன், டிராக்டர் உரிமையாளர் உள்ளிட்ட சிலர் விழுப்புரம் சென்றிருந்தனர். பின்னர் டிராக்டரை விழுப்புரம் போலீசாரிடம் இருந்து பெற்றுக்கொண்ட ராமநாதபுரம் மாவட்ட போலீசார், அதனை உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்கள் தனி வாகனத்தில் ராமநாதபுரம் சென்றனர். பின்னர் உரிமையாளர் உள்ளிட்ட சிலர் டிராக்டருடன் விழுப்புரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்றபோது பெரம்பலூரில் நடந்த விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பெரம்பலூரில் சாலை விபத்தில் பலியானவா்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
பெரம்பலூரில் சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர் விபத்து
இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமம், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை திண்டுக்கல் சென்று கொண்டிருந்த வாகனம், முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை முந்தும்போது எதிர்பாராதவிதமாக சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதி சாலையின் இடதுபுறத்தில் விபத்துக்குள்ளானது.
சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி, காயம் ஏற்பட்டவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தபோது, தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பஸ், 108 ஆம்புலன்ஸ் மீது மோதியதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி (வயது 60), பெரம்பலூர் மாவட்டம் அரணாரைச் சேர்ந்த ராஜேந்திரன் (45) (108 ஆம்புலன்ஸ் டிரைவர்) மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கவிப்பிரியா (22) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நிவாரண உதவி
இந்த செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். இவ்விபத்தில் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திண்டுக்கல் மாவட்டம் நீலா, ராமநாதபுரம் திலகன் (45), சேகர் (40), சாமிதாஸ் (40), திண்டுக்கல் மாவட்டம் கணேசன் (42) ஆகியோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டு, அவர்களது குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.