மீனவர்கள் திசை மாறி செல்வதை தடுக்க அதிராம்பட்டினத்தில், கலங்கரை விளக்கம் அமைக்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை
மீனவர்கள் திசை மாறி செல்வதை தடுக்க அதிராம்பட்டினத்தில், கலங்கரை விளக்கம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மீனவர்கள்

அதிராம்பட்டினம் கடற்பகுதியான தம்பிக்கோட்டை மறவக்காடு, கரிசக்காடு, அதிராம்பட்டினம், கரையூர் தெரு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மூலம் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிதொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மழை மற்றும் பனி காலங்களில் கடலில் மீன் பிடித்து விட்டு மீனவர்கள் கரை திரும்பும் போது கரைப்பகுதி சரிவர தெரியாததால் திசை மாறி செல்லும் நிலை உள்ளது.

இதனால் மீனவர்கள் சரியான நேரத்தில் தாங்கள் பிடித்து வரும் மீன்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வர முடியாமல் போய்விடுகிறது. கஷ்டப்பட்டு மீன் பிடித்து களைத்து வரும் நிலையில் திசை தெரியாததால் மேலும் கூடுதலாக அலைய வேண்டி உள்ளது.

கலங்கரை விளக்கம்

எனவே சரியான திசை நோக்கி வருவதற்கு உறுதுணையாக அதிராம்பட்டினம் கடற்பகுதியில் கலங்கரை விளக்கம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:-

தஞ்சை மாவட்ட கடற்கரையை பொறுத்த வரை மனோராவில் மட்டுமே கலங்கரை விளக்கம் உள்ளது. மற்றபடி தம்பிக்கோட்டை முதல் கீழத்தோட்டம் வரை கலங்கரை விளக்கம் இல்லாததால் மழை மற்றும் பனிக்காலங்களில் மீன்பிடித்து விட்டு மீனவா்்கள் கரை திரும்பும் போது சரியான திசை தெரியாமல் முத்துப்பேட்டை மற்றும் கட்டுமாவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு திசை மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் எங்களுக்கு கூடுதல் நேரமும், அலைச்சலும் ஏற்படுகிறது. எனவே அதிராம்பட்டினம் கடற்கரையோர பகுதிகளில் கலங்கரை விளக்கம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments