மாங்காட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்தவரால் பரபரப்பு




வடகாடு அருகே மாங்காட்டில் நீர்நிலை பகுதிகளில் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த 12, 13-ந் தேதிகளில் ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன் மற்றும் வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணு, கிராம நிர்வாக அலுவலர், வடகாடு போலீசார் முன்னிலையில், சுந்தரபாண்டி புதுக்குளம், மாங்காட்டான்குளம், தீர்த்தான்குளம் ஆகிய பகுதிகளில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாங்காடு சுள்ளியகுடியிருப்பு பகுதியை சேர்ந்த பழனியப்பன் என்பவர் பெட்ரோல் கேனுடன் மாங்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக தீக்குளிக்க போவதாக வந்தார். இதைத்தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி செல்வராஜ் வடகாடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த வடகாடு போலீசார் பழனியப்பனிடம் இருந்து பெட்ரோல் கேனை பறித்து கொண்டு அவரை ஆசுவாசப்படுத்தினர். 

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தன்னுடைய நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றிவிட்டு அருகேயுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை எனக்கூறி பெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க வந்ததாக கூறியுள்ளார். இதைதொடர்ந்து போலீசார் அவரை சமாதானப்படுத்தி இன்னும் ஒரு வார காலத்திற்குள் அதிகாரிகள் மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து விடும் என கூறினர். இதையடுத்து அவர் அங்கிருந்து சென்றார். ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments