ராமேசுவரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்தை காண அனுமதி




தனுஷ்கோடியில் ஓராண்டுக்கு முன்னர் கட்டி திறக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தில் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புயலால் அழிந்து போன தனுஷ்கோடியை மீட்டெடுக்கும் வகையிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், இந்திய எல்லை பகுதியான மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்கரை பகுதிகளை கண்காணிப்பதற்காகவும், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறையின் சார்பாக தனுஷ்கோடியில் புதிய கலங்கரை விளக்கம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக 18.02.2020-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.



இதையடுத்து, கடந்த 14.05.2022 அன்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறையின் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் காணொலிக் காட்சி கலங்கரை விளக்கம் திறக்கப்பட்டது. ரூ. 7 கோடி மதிப்பில் 50 மீட்டர் உயரத்தில் மின்தூக்கி (லிஃப்ட்) வசதிகளுடன் கூடிய கலங்கரை விளக்கமாக இது அமைக்கப்பட்டுள்ளது.


இந்த கலங்கரை விளக்கத்திலிருந்து ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடியின் அழகை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கு வசதியாக உச்சியில் பார்வையாளர் மாடமும், கலங்கரை விளக்க வளாகத்தில் குழந்தைகளுக்கான பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளன. சூரியஒளி மின்சாரம் மூலம் இயங்க உள்ள இந்த கலங்கரை விளக்கத்தில் கடல் காற்றால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அதிக உறுதித் தன்மை கொண்ட கம்பிகளும், ரசாயனக் கலவைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கலங்கரை விளக்கத்தின் மேல்பகுதியில் அமைக்கப்படும் மின்விளக்கின் வெளிச்சமானது, 30 கி.மீ. தூரம் வரை, அதாவது தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் வரையிலும் ஒளிவீசும் தன்மை கொண்டது. இந்த கலங்கரை விளக்கம் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு முதல் நாள் மட்டும் (14.05.2022) அனுமதி வழங்கப்பட்டது.

கலங்கரை விளக்கம் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தது. இந் நிலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் , சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் கலங்கரை விளக்கத்தை காண்பதற்கு தற்போது மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு சிறியவர்களுக்கு ரூ. 5, பெரியவர்களுக்கு ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதற்கு தனி கட்டணம்.

கலங்கரை விளக்கத்தின் உச்சியின் சில்லென்று வீசும் கடல் காற்றுடன் மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடற்பகுதிகள், தனுஷ்கோடி புயலில் அழிந்த கட்டிடங்கள், கோதண்ட ராமர் கோயில், கடற்பரப்பில் வெளிச்சம் நன்றாக இருக்கும் போது கச்ச தீவு, தலை மன்னார் வரையிலுமான மணல் தீடைகள் ஆகியவற்றை கண்டு ரசிக்க முடியும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments