திருச்சி மதுரை வழியாக சென்னை - திருநெல்வேலி இடையே விரைவில் வந்தே பாரத் ரயில்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்




சென்னை - நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையத்தில் குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் நிகழ்வு தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பி.அனந்த் தலைமை வகித்தார். ப.வேலுச்சாமி எம்.பி. முன்னிலை வகித்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடைரோடு ரயில்
நிலையத்தில் குருவாயூர் - சென்னை ரயில் நின்று செல்லும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியது: தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களுக்காக இதுவரை இல்லாத வகையில் நடப்பு நிதியாண்டில் ரூ.6,080 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 73 ரயில் நிலையங்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை ரயில் நிலையத்துக்கு மட்டும் ரூ.413 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 புதிய ரயில் பாதைகள் அமைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பழநி - ஈரோடு புதிய ரயில் பாதை திட்டமும் அடங்கும். மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரயில் பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை -
நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது என்றார்.


அம்மையநாயக்கனூர் பேரூராட்சித் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மதுரை ரயில்வே கோட்ட மூத்த வணிக மேலாளர் ஆர்.பி.ரதிப்பிரியா நன்றி கூறினார்.

திமுக, பாஜக மாறி மாறி கோஷம்: நிகழ்ச்சியில் மதுரை கோட்ட மேலாளர் அனந்த், ப.வேலுச்சாமி, எல்.முருகன் ஆகியோர் பேசத் தொடங்கியபோது ‘பாரத் மாதா கி ஜே’ என பாஜகவினர் கோஷமிட்டபடி இருந்தனர். ரயில் புறப்பட்டபோது பாஜக, திமுக தொண்டர்கள் சிலர் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் கட்சிக் கொடிகளுடன் ரயிலில் ஏறினர். பிறகு சிறிது நேரத்தில் இறங்கினர். நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் எல்.முருகன் காரில் ஏற சென்றபோது ரயில் நிலையத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த திமுகவினர், முதல்வர் ஸ்டாலின் வாழ்க என கோஷம் எழுப்பினர். பதிலுக்கு பாஜகவினரும் பிரதமர் மோடி வாழ்க என்று கோஷமிட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments