அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை புதுக்கோட்டை வருகை ஜல்லிக்கட்டு பாராட்டு விழா ஏற்பாடுகள் மும்முரம்
புதுக்கோட்டைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகை தருகிறார். ஜல்லிக்கட்டு பாராட்டு விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கானதடை நீக்கம்

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளைகளின் உரிமையாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட வக்கீல்களின் மூலம் இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பு பெறப்பட்டது.

இதையொட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டமும், அவரை பாராட்டி பாராட்டு விழா மாநாடும் நடத்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் முடிவு செய்தனர்.

விழா மேடை

புதுக்கோட்டை சிப்காட் அருகே தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் இடையப்பட்டி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடு நடைபெற்றது. கடந்த 5-ந் தேதி நடைபெறுவதாக இருந்த இந்தநிகழ்ச்சி ஒடிசா ரெயில் விபத்து காரணமாக 18-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு பாராட்டு விழா மாநாடு நடைபெற உள்ளது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை புதுக்கோட்டைக்கு வருகை தருகிறார். பாராட்டு விழா மாநாடு நடைபெறும் இடத்தில் மேடை, பந்தல் அமைக்கும் பணி, இருக்கைகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஜல்லிக்கட்டு காளையை மாடுபிடி வீரர் ஒருவர் அடக்குவது போன்ற சிலை வடிவிலான அமைப்புகள் விழா மேடையின் அருகே வைக்கப்பட்டுள்ளது. விழா மேடை அமைக்கும் பணியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டு தீவிரப்படுத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments