இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் சாவு: அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு




இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் பரிதாபமாக இறந்ததால் அவரது உறவினர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இளம்பெண் சாவு

அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் கதிரவன். இவருடைய மகள் ஐஸ்வர்யா (வயது 28). இவர் சென்னையில் வேலை பார்த்த போது, விழுப்புரத்தை சேர்ந்த ஜீவாவை (35) காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் விழுப்புரத்தில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா தனது தாய் வீடான அறந்தாங்கி அருகே உள்ள ராஜேந்திரபுரத்திற்கு வந்துள்ளார். தொடர்ந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சையின் பிறகு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.

இதற்கிடைேய ஐஸ்வர்யாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

உறவினர்கள் மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த ஐஸ்வர்யா உறவினர்கள் தவறான சிகிச்சையால் தான் ஐஸ்வர்யா இறந்து விட்டதாக கூறி அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments