நாகுடிக்கு வந்தடைந்த கல்லணை நீர்: நெல் மணிகள், மலர்களை தூவி வரவேற்ற விவசாயிகள்




அறந்தாங்கி அருகே நாகுடிக்கு வந்தடைந்த கல்லணை நீரை நெல்மணிகள், மலர்கள் தூவி விவசாயிகள் வரவேற்றனர்.

கல்லணை நீருக்கு வரவேற்பு

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந் தேதி தமிழக முதல்-அமைச்சரால் டெல்டா பாசன விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் ஆனது கடந்த 16-ந் தேதி கல்லணையை வந்தடைந்தது. மேலும் கல்லணைக்கு வந்து சேர்ந்த தண்ணீர் தமிழக அமைச்சர்களால் திறந்து விடப்பட்டது. அவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீரானது கல்லணை கால்வாய் கடைமடை பகுதியில் உள்ள அறந்தாங்கி அடுத்த நாகுடிக்கு நேற்று முன்தினம் வந்தடைந்தது.

இதையடுத்து கல்லணை கால்வாய் கடைமடை பகுதி பாசனக்காரர்கள் சங்க தலைவர் கொக்குமடை ரமேஷ் தலைமையில் ஏராளமான விவசாயிகள் மலர்கள் மற்றும் விதை, நெல்மணிகள் தூவி குலவை சத்தம் போட்டு மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

கிளை வாய்க்கால்களைதூர்வார வேண்டும்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கல்லணை கால்வாய் கடைமடை பகுதியில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர் சாகுபடி செய்து வருகிறோம். இதற்காக இப்பகுதியில் உள்ள 110 ஏரி, கண்மாய்களில் நீரை சேமித்து பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் இந்த ஆண்டு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு கடைமடை பகுதியை வந்து அடைந்ததற்கு தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

இருப்பினும் கால்வாயில் கிளை கால்வாய்களை தூர்வாருவதற்காக கடந்த ஆண்டு தமிழக அரசால் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ஒதுக்கப்பட்ட நிதியை சரியாக பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாய்க்காலில் முட்புதர்கள் மண்டி தண்ணீர் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கிளை கால்வாய் வாய்க்கால்களை தண்ணீர் சென்றடையும் வகையில் அதிகாரிகள் முறையாக தூர்வாரி விவசாயிகளுக்கு உதவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments