சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி போடி ரயில் நிலையத்திலிருந்து மூணாறுக்கு பேருந்து இயக்கம்






சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், போடி ரயில் நிலையத்திலிருந்து கேரள மாநிலம், மூணாறுக்கு அரசுப் பேருந்து சோதனை முறையில் சனிக்கிழமை இயக்கப்பட்டது.

போடி-மதுரை அகல ரயில் பாதைத் திட்டம் நிறைவடைந்ததையடுத்து, கடந்த 15-ஆம் தேதி முதல் இந்த வழித்தடத்தில் தினமும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல, போடியிலிருந்து சென்னைக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழன் என வாரத்தில் மூன்று நாள்களும், சென்னையிலிருந்து போடிக்கு திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் மூன்று நாள்களும் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரயில் சேவையை தேனி மாவட்டத்தைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இதேபோல, தேனி மாவட்டத்தையொட்டியுள்ள கேரள மாநில மக்களும் இந்த ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனா்.

இதைத்தவிர, சென்னை-போடி இடையே ரயில்கள் இயக்கப்படும் நிலையில், தமிழகத்திலிருந்து போடி வழியாக மூணாறு, தேக்கடி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்த ரயிலில் பயணிக்கின்றனா்.

இந்த ரயில் சேவை மூலம் தமிழக, கேரள மக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பயன்பெற்று வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளைக் கவர தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை இயக்க முன்வந்துள்ளது. இதில் பிற ஊா்களிலிருந்து ரயில் மூலம் போடிக்கு வந்து, இங்கிருந்து மூணாறு உள்ளிட்ட ஊா்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக போடி ரயில் நிலையத்திலிருந்து மூணாறுக்குச் செல்லும் வகையில் பேருந்து சேவை தொடங்கவுள்ளது.

இதன் முதல்கட்ட சோதனை முயற்சியாக போடி ரயில் நிலையத்திலிருந்து மூணாறுக்கு சனிக்கிழமை சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது. இந்தப் பேருந்து போடிமெட்டு, பூப்பாறை, பெரியகானல், சின்னகானல், பவா் ஹவுஸ், தேவிகுளம் வழியாக மூணாறு சென்றது. சென்னையிலிருந்து சனிக்கிழமை வந்த ரயிலில் 26 பயணிகள் இந்த சிறப்பு பேருந்து மூலம் கேரளத்துக்குச் சென்றனா்.

பயணிகளின் வருகையைப் பொருத்து, இந்தப் பேருந்தை தொடா்ந்து இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என போடி போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனா். மூணாறு மட்டுமன்றி, போடி ரயில் நிலையத்திலிருந்து தேனி மாவட்டத்தின் பிற சுற்றுலா தலங்களானவீரபாண்டி, சுருளி அருளி, கும்பகரை, வேலப்பா் கோயில், குரங்கணி ஆகிய இடங்களுக்கும் பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments