தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிருஷ்ணாஜிப்பட்டினம் கிளை சார்பில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிருஷ்ணாஜிப்பட்டினம் கிளை சார்பில் மாபெரும் மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினம் கிளை சார்பாக 18/06/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்டச் செயளாலர் முகமது மீரான் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சித்திக் ரகுமான், மாவட்ட  துணைச் செயலாளர் சேக் அப்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பேச்சாளர் ரஹ்மத்துல்லா MISC மற்றும் ஆவணம் ரியாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
இந்த கூட்டத்தின் தீர்மானங்களை ராஜா சாகிப் வாசித்தார்.

இறுதியாக நன்றியுரையை கிளைத் தலைவர் நைனா முகம்மது நிகழ்த்தினார். கிளை நிர்வாகிகள் நைனா முகம்மது, சைபுல் கரீம், சல்மான் கான், முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1: 
கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் மின் தடை மற்றும் மின் பற்றாக்குறை ஏற்படுவதால் கொளுத்தும் வெயில் காலத்தில் குழந்தைகள், நோய்வாய்ப்பட்ட முதியவர்கள் மற்றும் பொது மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஆகையால் கூடுதல் டிரான்ஸ்பாமர் அமைத்து மின் பற்றாக்குறையை சரிசெய்து தரும்படி சம்மந்தப்பட்ட மின்சாரத் துறையை இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் 2: 
கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் உள்ள மீன் பிடி துறைமுகம் குப்பை மேடாகவும், சுகாதாரம் இல்லாமலும் இருக்கிறது. இது சம்மந்தாக பல முறை புகார் செய்தும் இன்னும் அது சரி செய்யப்படவில்லை. எனவே சுத்தம் செய்து தருமாறும், துறைமுகங்களுக்கு செல்ல முறையான சாலை வசதி ஏற்படுத்தி தரும்படியும் சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் 3: 
கிருஷ்ணாஜிப்பட்டினம் MGR நகர் என்று அழைக்கப்படும் புதுமனை குடியிருப்புக்கு ECR ரோட்டில் இருந்து செல்லும் சாலையை காணவில்லை. அந்த சாலையை கண்டுபிடித்து உரிய இடத்தில் அமைத்துத் தருமாறும் அதே பகுதியில் ஊரில் உள்ள குப்பைகள் அனைத்தும் கொட்டப்பட்டு கடுமையான துர்நாற்றம் ஏற்படுகிறது. அந்தப் பகுதியே அசுத்தமாக காணப்படுகிறது அந்தப் பகுதியை சுத்தம் செய்து தருமாறு இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் 4: 
மேலும் அந்த MGR நகரில் மழலைப் பள்ளிக்கூடம், மருத்துவமனை, வழிபாட்டுத்தலம் மற்றும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த அனைத்திற்கும் பிரதானமாக பயன்படுத்தக்கூடிய பாலம் இடிக்கப்பட்டு பெரிய பள்ளம் தோண்டப்பட்டு புதிய பாலத்திற்கான வேலை நடைபெறுகிறது. இதனால் தற்போது முறையான சாலை வசதியில்லாமல் அந்தப் பகுதிக்கு செல்லக்கூடிய பள்ளி வாகனங்கள், குடிநீர் வாகனங்கள்  பயந்த வண்ணமே செல்கின்றன. எனவே மழைக்காலம் வருவதற்குள் புதிய பாலம் கட்டித் தருமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இக்கூட்டத்தின் வாயிலாக கோரிக்கை வைக்கப்படுகிறது.

தீர்மானம் 5:
தவ்ஹீதும், தர்பியத்தும். 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எனும் இப்பேரியக்கம் பட்டிதொட்டி எங்கும் வேர் பரப்பி ஏகத்துவ பிரச்சாரத்தை செய்து வருகிறது. ஏராளமான கிளைகள், பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், இலட்சக்கணக்கான உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என அல்லாஹ்வின் அருளால் பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. கொள்கை ரீதியான தொடர் எழுச்சிப் பயணத்திற்கு தனிநபர்களின் கொள்கை உறுதியும் மார்க்க அறிவும் இன்றியமையாதது. இதை கருத்தில் கொண்டு “தவ்ஹீதும் தர்பியத்தும்" எனும் செயல்திட்டத்தை வரும் ஜுன் முதல் தேதியிலிருந்து செப்டம்பர் வரை (4 மாதங்கள்) நடைமுறைப்படுத்த வேண்டும் என மாநில தலைமை சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மிகச்சிறப்பாக எமது கிளை/மாவட்ட மர்கஸில் நிறைவேற்ற வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் 6:
பொதுசிவில் சட்டம்
பொதுசிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்களும், மத அமைப்புகளும் கருத்துக்களை தெரிவிக்க  ஒன்றிய சட்ட ஆணையம் கோரியுள்ளது. நம் நாட்டில் குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாகவே உள்ளது.  ஆனால் திருமணம் , விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்துரிமை, ஈமக் காரியங்கள் போன்ற உரிமை சார்ந்த விவகாரங்களில் மட்டும் ஒவ்வொருவரும் தத்தமது மதச் சட்டங்களின் படி நடந்து கொள்ள நம் நாட்டுச் சட்டம் வகை செய்கின்றது. பல தரப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் இதுவே ஏற்றமான சட்டமும் சமத்துவத்திற்கான வழிமுறையுமாகும். எனவே இந்தியாவின் இறையாண்மைக்கும், தேச ஒருமைப்பாட்டிற்கும் எதிராக அமைந்துள்ள இந்த பொது சிவில் சட்டம் தொடர்பான முன்னெடுப்புகளை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் 7:
மணிப்பூர் கலவரம்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பிஜேபி அரசு ஆட்சி செய்து வருகிறது. சிறுபான்மை மக்களான குக்கி இன மக்களுக்கு எதிராக (அதில் அதிகப்படியானவர்கள் கிறித்தவர்கள்) மிகப்பெரிய வன்முறையை சமூக விரோதிகள் செய்து வருகின்றனர். இதில் 100 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும் பலருடைய சொத்துக்கள் சூறையாடப்பட்டதாகவும், தேவாலயங்கள் தீக்கு இறையாக்கப்பட்டு, மதகுருமார்கள் தாக்கப்படுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த கலவரங்களுக்கும் பிண்ணனியில் ஆளும் பாஜக அரசின் முதல்வர் பிரேன் சிங்கின் தூண்டுதல் உள்ளது என்று எதிர்க்கட்சிகள் வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகின்றன. இந்த வன்முறைகளை உடனடியாக தடுத்து நிறுத்த ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் மக்களை பிரித்து குளிர் காய நினைக்கும் பாஜக ஆட்சி ஒன்றியத்திலிருந்தும் , மணிப்பூர் மாநிலத்திலிருந்தும் வெளியேற்றுவதற்கு இந்திய மக்கள் உறுதி ஏற்க வேண்டும் என இந்நிகழ்ச்சியின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் 8:
கர்நாடக முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு 
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை அதிகமாக பெற்று தனிப்பெரும்பான்மை யுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. மதவெறுப்பு அரசியல் செய்த முன்னால் பாஜக அரசு முஸ்லிம்களின் 4 சதவீத இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களின் உள்ளங்களை கீறி கிழித்தது. நீக்கப்பட்ட முஸ்லிம்களின் 4 சதவீத இடஒதுக்கீட்டை திரும்ப தர வேண்டும் என கர்நாடகா மாநில அரசை இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் 9:
பாசிச பாஜக அரசு 
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து இஸ்லாமியர்களுக்கு விரோதமான சட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களிலும் முஸ்லிம் விரோதப் போக்கு தொடர்கின்றன. இந்திய நாட்டில் சிறுபான்மை சமூகம் பாசிச சக்திகளால் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகிறது. பசுவின் பெயரால், மதத்தின் பெயரால் முஸ்லிம்கள் கொல்லபடுகின்றனர். பலர் சிறைச்சாலைகளில் தள்ள படுகின்றனர். மாணவர்கள் மீது கூட கடுமையான வழக்குகள் பதியப்படுகின்றன. முஸ்லிம் பெண்கள் அப்ளிகேஷன் மூலமாக மானபங்கம் செய்யப்பட்டனர். ஹிஜாப் அனிய தடை, ஹலால் இறைச்சி தடை, ஒலி பெருக்கியில் பாங்கு சொல்ல தடை, போராட்டம் நடத்தினால் புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது,  என்று சொல்லில் அடங்காத துயரங்களை சுமந்து கொண்டு முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகிறோம். முத்தலாக தடை சட்டம். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து 370 ஐ நீக்கியது. NIA விற்கு சிறப்பு அதிகாரங்கள், அடுத்து பொது சிவில் சட்டம் என்று முஸ்லிம்களை ஒடுக்கும் அனைத்து விஷயங்களையும்  பாசிச பாஜக அரசு செய்து வருகிறது. பாஜக அரசின் இந்த அத்துமீறல்களை வன்மையாக கண்டிக்கிறோம். அரசின் இந்த முஸ்லிம் விரோதப்போக்கினை ஜனநாயக ரீதியாக  எதிர் கொள்வோம்  என இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் 10:
வெள்ளை அறிக்கை 
தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு நடைமுறையில் இருக்கும் கல்வி வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மூன்றரை சதவீத இடஒதுக்கீடு முறையாக பல துறைகளில் வழங்கப்படுவதில்லை. மதம் மாறி இஸ்லாத்தை தழுவியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. ரோஸ்டர் முறையில் சரியான வரிசை முறைப்படி இஸ்லாமியர்கள் பயன்பெற முடிவதில்லை. இஸ்லாமியர்களின் சதவீதத்தோடு ஒப்பிடுகையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு குறைவு. இதில் பல குளறுபடிகள் உள்ளது. தமிழக அரசு இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை அனைவரும் தெளிவாக அறியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து விகிதாச்சார பிரிநிதித்துவ முறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
 
தீர்மானம் 11:
தமிழகத்தில் இடஒதுக்கீடு 
கடந்த ஆட்சி காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 தனி இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவேன் என்று ஜெயலலிதா வாக்களித்தார்.அவர் வாழும் காலம் வரை அதற்கான எந்த முன்னெடுப்பையும் அவர் செய்யவில்லை. அவரின் மறைவிற்கு பிறகு அதிமுகவினர் பாஜகவின் அடிமைகளாக மாறி விட்டனர். சிறுபான்மையினரான முஸ்லிம்களின்  இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே தமிழக அரசு நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை சமுதாயத்தின் மொத்த வாக்குகளையும் பெற்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு..க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 3.5% இடஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்தி தர வேண்டும் என்று இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் 12:
முஸ்லிம் சிறைவாசிகள் 
தமிழக சிறை வாசிகள் ஆண்டு தோறும் அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால் நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது இல்லை. மதத்தின் பெயரால் அவர்கள் மீது காட்டப்படும் இந்த  வேற்றுமை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், ஆதிநாதன் ஆணையத்தின் அறிக்கை மீதான நடவடிக்கையை மாநில அரசு விரைந்து எடுக்க வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் 13:
பூரண மதுவிலக்கு 
குடும்பத்தினர் மது குடிப்பதால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை இன்று தமிழகத்தில் நிலவி வருகிறது  சமீபத்தில் விஷ்ணுப்பிரியா எனும் பெண் தற்கொலை செய்து இறந்து விட்டார். குடிப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு எனும் போது அதை முற்றிலும் ஒழிக்க இதுவரை அரசு எந்த செயல் திட்டத்தையும் அமல்படுத்தவில்லை. கள்ளச்சாராயத்தை தடுக்க கூடிய அனைத்து வழிமுறைகளையும் அரசு நிறைவேற்றிப் பூரண மதுவிலக்கை நிறைவேற்ற வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் 14: 
கல்வியில் கவனம் செலுத்துவோம்
இஸ்லாமிய சமுதாயம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் அதில் ஒன்று கல்வியின்மையாகும்.பல கோடி மக்களை கல்வி வேலைவாய்ப்பில் முன்னேற்றுவது என்பது ஒரு அரசுக்குத்தான் சாத்தியம் என்றாலும் இஸ்லாமிய சமூகம் தன்னளவில் செய்ய வேண்டிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உயர்கல்வியில் தன்னை முன்னேற்றி கொள்ள தொடர்ந்து உழைக்க வேண்டும் எனும் செய்தியை தொடர்ந்து மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்போம் என இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: ரபீக்ராஜா, அறந்தாங்கி.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments