தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்றவர்கள் கரை திரும்பினர்: போதிய அளவு மீன்கள் கிடைக்காததால் புதுக்கோட்டை மீனவர்கள் ஏமாற்றம்




மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற புதுக்கோட்டை மீனவர்கள் கரை திரும்பினர். போதிய அளவு மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மீன்பிடி தடைக்காலம்

தமிழகம் முழுவதும் ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க மீன்வளத்துறையால் தடை விதிக்கப்படும். அதேபோல் இந்த வருடமும் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்திருந்தனர்.

ஏற்பாடுகள் தீவிரம்

இந்நிலையில் கடந்த 15-ந் தேதியுடன் தடைக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரப்படுத்தி வந்தனர். மீனவர்கள் 15-ந் தேதி மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டும். ஆனால் மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் நாளான 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வார விடுமுறை என்பதால் அன்று அவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இறால், நண்டுகள்...

இதைத்தொடர்ந்து இந்த பகுதியை சேர்ந்த சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு தங்கள் படகுகளில் டீசல், ஐஸ்கட்டிகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று காலை 6 மணி முதல் கரை திரும்ப தொடங்கினர்.

மீனவர்கள் வலையில் நகரை, திருக்கை, கிழங்கா, காரல், சீலா, ஊடகம், வஞ்சிரம், கணவாய், நண்டு, இறால் உள்ளிட்ட மீன்களை பிடித்து வந்தனர்.

ஏமாற்றம்

முன்னதாக 61 நாட்களுக்கு பிறகு மீன்பிடித்துக் கொண்டு கரை திரும்பும் மீனவர்கள் அதிக மீன்களை கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்து மீன்பிடி தளங்களில் வெளியூர் வியாபாரிகள் மட்டுமல்லாமல் வெளிமாநில வியாபாரிகளும் குவிந்திருந்தனர்.

ஆனால் மீனவர்கள் எதிர்பார்த்தது போல் போதுமான அளவு மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடனே கரை திரும்பினர். இதனால் மீனவர்கள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் கவலையடைந்துள்ளனர்.

மீனவர்கள் வேதனை

வழக்கமாக தடைக்காலம் முடிந்து கடலுக்குள் சென்று மீன்பிடித்து வரும் மீனவர்கள் ஒரு படகிற்கு 200 கிலோ இறால்கள் பிடித்து வருவார்கள். அதுபோல் கணவாய், நண்டு ஆகியவற்றையும் அதிக அளவில் பிடித்து வருவார்கள். ஆனால் இந்த வருடம் ஒரு விசைப்படகுக்கு 80 முதல் 100 கிலோ இறால் மட்டுமே பிடித்து வந்துள்ளனர். இதேபோல் கணவாய், நண்டு ஆகியவற்றையும் குறைந்த அளவே பிடித்து வந்துள்ளனர்.

ஒரு விசைப்படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவதற்கு செலவு ரூ.70 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் தற்போது ஒரு படகிற்கு ரூ.65 ஆயிரம் வரை மட்டுமே மீன்கள் சிக்கி உள்ளது. இதனால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

விலை குறைந்தது

தடைக்காலத்திற்கு முன்பு ஒரு கிேலா நண்டு ரூ.550-க்கு விற்றது. ஆனால் தற்போது ரூ.400-க்கு விலை போனது. இதேபோல் ஒருகிலோ இறால் ரூ.500-க்கு விற்றது, தற்போது ரூ.400-க்கும் போனது. வஞ்சிரம் ரூ.600-க்கு விற்றது ரூ.500-க்கு விலைபோனது. கணவாய் ரூ.400-க்கு விற்றது ரூ.300-க்கு விலை போனது.

45 நாட்களாக குறைக்க வேண்டும்

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறுகையில், வருடந்தோறும் தடைக்காலம் முடிந்து கடலுக்குள் சென்றால் அதிகளவு மீன்கள் கிடைக்கும். ஆனால் இந்த வருடம் மீன்களின் வரத்து மிகவும் குறைவு, இதற்கு காரணம் காலநிலை மாற்றம் என்று கூறுகின்றனர். வேறு பகுதியை சேர்ந்த மீனவர்கள் இந்த பகுதியில் வந்து மீன்பிடிப்பதால் இந்த பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கு போதிய அளவு மீன்கள் கிடைக்கவில்லை.

தற்போது கடலில் காற்று இல்லாமல் காணப்படுகிறது. இதனால் மீன் வரத்து குறைந்து காணப்படுகிறது. ஆகையால் தமிழக அரசு 61 நாள் மீன்பிடி தடைக்காலத்தை முன்பு இருந்தது போல் 45 நாட்களாக மாற்ற வேண்டும். அப்ேபாது தான் மீனவர்களுக்கு தடைக்காலம் முடிந்து கடலுக்குள் சென்று மீன் பிடித்தாலும் அதிகளவு மீன்கள் கிடைக்கும், என்றனர்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments