கிழக்கு கடற்கரை சாலையோரங்களில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்களால் வாகனங்களுக்கு இடையூறு..




ராமநாதபுரம் : சாயல்குடி-கீழக்கரை-ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையோரங்களில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களால் போக்குவரத்திற்கு இடையூறு மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் விரைந்து அவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி-நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை ராமநாதபுரம் மாவட்டம் வழியாக செல்கிறது. சாயல்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான சாலையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஆன்மீக யாத்திரிகர்களும் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, தேவிபட்டினம், திருவாடானை, நயினார்கோயில், திருஉத்தரகோசமங்கை, ஏர்வாடி போன்ற ஆன்மீக தலங்களுக்கு வந்து செல்கின்றனர்.

இதனைப் போன்று புதுக்கோட்டை, தேவகோட்டை சாலை மார்க்கத்தின் வழியாக வந்து திருச்செந்தூர், கன்னியாகுமரி செல்வதற்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். மேலும் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தொண்டி, கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம், கீழமுந்தல், மூக்கையூர், நரிப்பையூர் மற்றும் ரோச்மாநகர் கடற்கரை பகுதிகளிலிருந்து மீன் உள்ளிட்ட கடல் சார் பொருட்கள், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து மரக்கரிகள், பனை மர பொருட்கள் போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் செல்கிறது.

இதனைப் போன்று தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும் பஸ்கள், பள்ளி, கல்லூரி வேன்கள் மற்றும் டூவீலர்கள், ஆட்டோ, கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் என இந்த பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து கொண்டே செல்கிறது. மாவட்ட எல்லையான கன்னிராஜபுரம் தொடங்கி சாயல்குடி, சிக்கல், ஏர்வாடி, கீழக்கரை, ராமநாதபுரம், தொண்டி வரையிலும் சுமார் 100க்கும் க்கும் மேற்பட்ட ஊர்கள் சாலையோரம் மற்றும் உள்பகுதியில் அமைந்துள்ளது. இத்தகைய போக்குவரத்து மிகுந்த இச்சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.

குறிப்பாக ஏர்வாடி, கீழக்கரை முதல் ராமநாதபுரம் அருகே உள்ள பால்கரை, ஆர்.எஸ் மடை வரையிலும் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இரண்டு வாகனங்கள் விலகி செல்லும் போது குறிப்பாக வளைவான பகுதிகளில் வாகனங்கள் மீது சீமை கருவேல மரம் உரசி சேதம் ஏற்படுகிறது, பஸ்ஸில் ஜன்னல் இருக்கையில் அமர்ந்து செல்வோரை பதம் பார்ப்பதாக கூறப்படுகிறது. எனவே கிழக்கு கடற்கரை சாலையோரம் அமைந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அழிக்க முடியாத மரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சேதுபதி மன்னர்கள் ஆட்சி காலத்தில் சுமார் 2ஆயிரம் நீர்நிலைகள் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அப்போது பிரிக்கப்படாத மதுரை மாவட்டத்தின் வழியாக வரத்து ஆறு, கால்வாய்களும் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் தொடர் வறட்சியால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது, இதனால் இப்பகுதி விவசாயிகள் தஞ்சாவூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு பிழைப்பு தேடி சென்றனர்.

இதனால் 1950களில் மாவட்டத்தில் நச்சுதன்மை அறியாத சீமை கருவேலமரத்தை விதைக்கப்பட்டது. இந்த மரம் நன்றாக வளர்ந்தது. விவசாயிகள் அதை வெட்டுவது, கரியாக்கி விற்பது, வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்கு அனுப்புவது, செங்கல், சுண்ணாம்பு சூலை, சிவகாசி பட்டாசு தொழிற்சாலை, நீராவியால் இயங்கும் தொழிற்சாலை, மின் உற்பத்தி நிலையம், கொள்ளம்பட்டரை போன்றவற்றிற்கு அனுப்புவது உள்ளிட்டவற்றால் கூலியும், வேலையும் கிடைத்தால் பிழைப்பு தேடி சென்றவர்கள் மீண்டும் சொந்த கிராமங்களுக்கு திரும்பு அளவிற்கு சீமை கருவேல மரம் அப்போது உதவி செய்தது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் உதவிய மரம், தற்போது விவசாயம், நிலத்தடி நீர்மட்டம், பாரம்பரியமிக்க மண்ணிற்கு எதிராக வளர்ந்து நிற்கிறது.

இந்த மரம் நிற்கும் இடத்தில் மற்ற தாவரங்கள் வளராது, அல்லினோபதி எனும் வேதி பொருள் அதிகமாக இருப்பதால் கண்மாய், வரத்து கால்வாய் போன்றவற்றில் வளர்ந்து, நீர் பரப்பு குறைந்து விட்டது. இந்த மரத்தின் பிடியில் வீணாகும் விவசாய நிலங்களின் சாகுபடி பரப்பளவு ஆண்டுக்கு 2.5 சதவீதம் குறைந்து வருவதாக வேளாண் ஆய்வுகள் தெரிவிக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 42ஆயிரம் ஹெக்டர் பரப்பில் இந்த மரம் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. மண்ணை, மலட்டாக்கிய இந்த மரத்தின் காய்களை திண்ணும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் மலட்டாக்கியது. கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள், விவசாய நிலங்கள், புறம்போக்கு இடங்களில் வளர்ந்து, இன்று போக்குவரத்து மிகுந்த சாலையோரங்களிலும் வெட்ட, வெட்ட வளர்ந்து வருகிறது. எனவே நிரந்தரமாக வளரவிடாமல் தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய சோலார் சிக்னல் அமைக்க வேண்டும்: தூத்துக்குடியிலிருந்து ராமநாதபுரம் வழியாக நாகப்பட்டிணம் வரையிலான கிழக்கு கடற்கரை இரு வழிபாதை சாலையானது கடந்த 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அதனை அப்போது துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனால் கிழக்கு கடற்கரை சாலையுடன் இப்பகுதிகளிலுள்ள பெரிய,சிறிய துறைமுகங்களின் சாலைகள் இணைப்பு பெற்றதால் கடல் சார் பொருட்கள், வேளாண்மை மற்றும் சரக்கு வர்த்தகம் அதிகரித்தது.

மேலும் இந்தச்சாலை ராமேஸ்வரம், வேளாங்கண்ணி, நாகூர் தர்கா உள்ளிட்ட 22 முக்கிய ஆன்மீக சுற்றுலா தலங்களின் வழித்தடத்தையும் இணைத்ததால் சுற்றுலா பயணிகள் போக்குவரத்தும் அதிகரித்து காணப்படுகிறது. நெடுஞ்சாலையில் வேகத்தடை, விபத்துப்பகுதி, கால்நடை நடமாடும் பகுதி, பள்ளி, மருத்துவமணை என பல்வேறு விழிப்புணர்வு சாலை விதி அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனை போன்று சீமை வருவேல மரம் வளர்ந்துள்ள ஆபத்தான பகுதி என குறிப்பிட வேண்டும். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் சாலை சீரமைக்கும் பணிகள் பகுதி, பகுதியாக நடந்தது.

அப்போது பெரும்பாலான இடங்களில் தானியங்கி சோலார் சிக்னல் அமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு அவை செயல்படாமல் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் ஓட்டுனர்கள் கவனகுறைவாக செல்லும் நிலை உள்ளது. எனவே அனைத்து இடங்களிலும் புதிய சோலார் சிக்னல் அமைக்க வேண்டும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments