துறைமுகம் அமைத்து தொண்டி நவீனப்படுத்தப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் உள்ள பழஞ் சிறப்பும், வரலாற்று பெருமையும் வாய்ந்த ஊர் தொண்டி. சோழ நாட்டிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலையான சேது மார்க்கத்தில் ராமேசுவரம் செல்லும் பண்டைய பெரு வழியில் இது அமைந்துள்ளது. கடலால் துண்டிக்கப்பட்ட இடம் என்ற பொருளில் தொண்டி என்று அழைக்கப்படுகிறது. முதலாம் ராஜராஜ சோழன் பெயரால் இது பவித்திர மாணிக்கப்பட்டினம் என்று அழைக்கப்பட்டுள்ளது.

தொண்டியில் உள்ள பாண்டியர் கல்வெட்டுகளில் இது ''தொண்டியான பவித்திர மாணிக்கப் பட்டினம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சங்க காலத்தில் கேரளாவில் அரபி கடற்கரையில் அமைந்த தொண்டி என்ற பட்டினம் சங்க இலக்கியங்களிலும் வெளி நாட்டார் குறிப்பு களிலும் குறிப்பிடப்படும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சேரமன்னருக்குரிய துறைமுக பட்டினமாகும்.

ஆனால் வங்க கடற் கரையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்த தொண்டி சங்க காலத்திற்குப் பின்னர் கி.பி 400-ல் இருந்து வரலாற்று சிறப்பு வாய்ந்த துறைமுக நகராக விளங்கி யுள்ளது. இலங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் அகில், துகில், ஆரம், கற்பூரம் முதலிய பொருட்கள் தொண்டியில் வணிக சரக்குகளாக வந்து இறங்கிய தாகவும், அவற்றின் வாசம் கொண்டல் என்னும் கிழக்கு காற்றால் மதுரை வரை வந்து சேர்ந்தது என்றும் குறிப்பிடப்படுகிறது.

கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியன் நின்றசீர் நெடுமாறனை (கூன்பாண்டியன்) புகழ்ந்து பாடிய பாண்டிக் கோவையில் இது பாண்டிய மன்னருக்குரிய தொண்டி என்ற பெயரில் "மீனவன் தொண்டி", "மாறன் தொண்டி" என்று குறிப்பிடப் படுகிறது. யாப்பருங்கலக் காரிகை என்ற நூலில் இது "வரகுணன் தொண்டி" என்று குறிப்பிடப்படுகிறது. மூன்றாம் நந்திவர்மனை பற்றிய நந்திக்கலம்பகம் என்ற இலக்கியத்திலும் இது பாண்டியருக்கு உரியதாக குறிப்பிடப்படுகிறது. வணிக முக்கியத்துவமும், அரசியல் முக்கியத்துவமும் வாய்ந்த இத்துறை முகபட்டினத்தைக் கைப்பற்றுவதற்கு கி.பி 12-ம் நூற்றாண்டில் பாண்டியர் சிங்கள மன்னர்கள், சோழர் ஆகியோருக்கிடையே போர்கள் நடைபெற்றதாக மகாவம்சமும் சோழரின் ஆர்ப்பாக்கம் கல்வெட்டு தெரிவிக்கின்றன.

இத்தனை சிறப்பு வாய்ந்த தொண்டியின் தொன்மையை அறியும் நோக்கில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1980-ல் தொண்டியின் வடபுறமுள்ள தொண்டியம்மன் கோவில் மேட்டில் அகழாய்வு செய்தது. இப்பகுதியை பாண்டிய மன்னர்கள் இடைக்கால பாண்டிய நாட்டில் தொண்டி மிகச்சிறந்த துறைமுகமாக விளங்கியதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டியது.

மேலும் இந்த ஆய்வில் தொண்டி சீன நாட்டோடு தொடர்பு கொண்டிருந்ததை வெளிப்படுத்தும் சீனிட்டுச் செலான் வகை பானை ஓடுகள் கிடைத்தன. மேலும் முதலாம் ராஜராஜன், நாயக்கர் கால காசுகளும் கிடைத்தன. தொண்டியில் பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டு பிற்காலத்தில் புதுப்பித்து கட்டப்பட்ட சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள பிற்கால பாண்டியர் கல்வெட்டு இதனை நகரீசுவரர் கோவில் என்று குறிப்பிடுகிறது.

மேலும் தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நம்புதாளையில் பாண்டிய மன்னன் பெயரில் அழைக் கப்பட்ட 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவாலயம் உள்ளது. இதனை தெரிவிக்கும் வகையில் பாறைக்கல்வெட்டும் உள்ளது. இக்கோவிலை ரெத்தினம் பிள்ளை வகையறா வாசு குடும்பத்தினர் இன்றும் பராமரித்து வருகின்றனர். மேலும் இது போல கிழக்கு கடற்கரை சாலையில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட சிவாலயங்கள் பல உள்ளது.

தொண்டிக்கு வடக்கே பழம்பெருமை வாய்ந்த காவல் தெய்வமான தொண்டியம்மன் கோவில் உள்ளது. தொண்டியில் உள்ள குடிநீர் குளமான கைக்குளவர் குளம் தற்போது கக்கிளான் குளம் என்று அழைக்கப்படுகிறது. இந்த குளத்தில் வீரபாண்டியன்

(கி.பி.1198) கல்வெட்டு "காளி கணத்தான்குளம்" என்ற பெயரில் வணிக வீரர் தொடர்பால் இக்குளம் தோற்றுவிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. இக்குளத்தைச் சீர்திருத்தி இதற்குரிய மடையை மருது சேர்வைகாரர் செய்வித்துள்ளதை இங்குள்ள கி.பி.1795 -ம் ஆண்டு கல்வெட்டு ஒன்று தெரி விக்கிறது.நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் செட்டி நாட்டு பகுதியில் வீடுகள் கட்டுவதற்கு பர்மாவிலிருந்து தேக்கு மரங்களை தொண்டி துறைமுகம் வழியாகவே கொண்டு வந்துள்ளனர். தூத்துக்குடியில் துறைமுகம் வந்த பின் புகை வண்டி, ெரயில் பாதை என வளர்ச்சியடைந்த பின் தொண்டி துறைமுகம் தனது வரலாற்றை இழந்து தற்போது மீன்பிடி கிராமம் போல் ஆனது. மேலும் இங்கு கப்பல்படையும் இருந்தது.

இங்கு கடலியல் மற்றும் கடலோரவியல் கல்லூரி இருந்தும் இல்லாதது போல் உள்ளது. ஆனால் கட்டண கடற்கரை பூங்கா உள்ளது. அரசு பொது மருத்துவமனை, அரசு நூலக கட்டிடம், அரசு போக்குவரத்து பணி மனை என எல்லாம் இப்பகுதி மக்களின் கனவாகவே உள்ளது. அரசும், தொல்லியல் துறையும், சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் பழமை சிறப்பு வாய்ந்த தொண்டியை பழமை மாறாமல் துறைமுகமாக்கி, நவீனப்படுத்தப்படுமா? என்பதை இந்த பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments