நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு: புதுக்கோட்டையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை
வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடாக புதுக்கோட்டையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை தொடங்கியது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்

அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் படிப்படியாக தொடங்கி உள்ளது. அந்த வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதற்கட்டமாக சோதனை செய்து தயாராக வைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில் இந்த பணி தொடங்கியது. இதனை கலெக்டர் மெர்சி ரம்யா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையில் இந்த பணி நடைபெறுகிறது. 3,316 வாக்குப்பதிவு எந்திரங்கள், 2,204 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 2,500 வி.வி.பேட் எந்திரங்கள் ஆகியவை சோதனை செய்யப்படுகிறது. இந்த எந்திரங்கள் நல்ல முறையில் இயங்குகிறதா? என சோதிக்கப்படுகிறது.

பொறியாளர்கள்

இந்த பணிகளில் பெல் நிறுவனத்தினை சேர்ந்த 8 பொறியாளர்கள், வருவாய் துறையினை சேர்ந்த அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் அனைத்தும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரு மாத காலத்திற்கு நடைபெற உள்ளது. இந்த சோதனையின் போது செயல்படாத மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படாது. அதற்கு பதிலாக புதிய எந்திரங்கள் பெறப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, பெல் நிறுவனத்தினத்திலிருந்து புதிதாக வரப்பெற்ற 600 கட்டுப்பாட்டு எந்திரங்கள் பெற்று கொள்வதற்கான சோதனை பணி நடைபெற்று வருகிறது என கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், தனி தாசில்தார் (தேர்தல்) சோனை கருப்பையா ஆகியோர் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments