ஆவுடையார்கோவிலில், அறந்தாங்கி, கறம்பக்குடி, மணமேல்குடி, கீரமங்கலம் பகுதிகளில் கனமழை தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது
கறம்பக்குடி, மணமேல்குடி, அறந்தாங்கி, கீரமங்கலம் பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

கனமழை

கறம்பக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்த போதும் கறம்பக்குடி பகுதியில் மழை இல்லை. ஏரி, குளங்கள் வற்றிய நிலையில் ஆடிப்பட்ட விதைப்பிற்கான மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர். கடந்த மாதம் பலத்த காற்று வீசியதில் வாழை, கரும்பு, நெற்கதிர்கள் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டது. ஆனால் போதிய மழை இல்லை.

இந்நிலையில் நேற்று மாலை கறம்பக்குடி பகுதியில் கருமேகங்கள் திரண்டு திடீரென மழை கொட்டியது. ஒரு மணி நேரத்திற்குமேல் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் மழை நீர்பெருக்கெடுத்து ஓடியது.

மழைநீர் தேங்கியது

கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் அப்பகுதிகளில் வசிப்பவர்கள் அவதிப்பட்டனர். கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலை, குளக்காரன் தெரு, கண்டியன் தெரு, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

இதேவேளையில் கறம்பக்குடி அருகே உள்ள அம்புக்கோவில், மழையூர், ரெகுநாதபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆடிப்பட்டம் விதைப்பிற்காக வயல் வெளிகளை தயார் செய்திருந்த நிலையில் இந்த மழை உதவியாக இருக்கும் என தெரிவித்தனர்.

மணமேல்குடி, கீரமங்கலம்

மணமேல்குடி அடுத்த கட்டுமாவடி சுற்றியுள்ள கிராமங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கீரமங்கலம், கொத்தமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் மழை பெய்தது. தொடர் மழையால் விவசாய பயிர்களுக்கு மோட்டார்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சும் நிலை குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆனாலும் கன மழை பெய்தாலும் சாலையோர வடிகால் வாய்க்கால்கள் இல்லாததால் மழைத்தண்ணீர் ஏரி, குளங்களுக்கு வராமல் சாலைகளிலேயே தாழ்வான பகுதிகளில் தேங்கி சாலையை சேதமாக்கி வருகிறது. எனவே மழைக்காலம் தொடங்கியுள்ளதால் சாலையோர வடிகால் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.

அறந்தாங்கி

அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சாலை ஓர கடைகளில் கூரைகள் காற்றில் பறந்தன.

புதுக்கோட்டையில் திடீர் மழை

புதுக்கோட்டையில் நேற்று காலையில் வெயில் கொஞ்சம் இருந்தது.

இந்த நிலையில் மாலை 5 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டு சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை பரவலாக பெய்தது. தொடா்ந்து இரவில் தூறியபடி இருந்தது.

இந்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. ஆவுடையார்கோவிலில் கனமழை பெய்தது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments