பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்: விண்ணப்ப படிவம் வீடு, வீடாக வினியோகம் ‘‘யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்’’ என கலெக்டர் பேட்டி


பெண்களுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தில் விண்ணப்ப படிவம் வீடு, வீடாக வினியோகிக்கப்படும் எனவும், யாரிடமும் பணம் கொடுத்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

விண்ணப்ப படிவம்

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞா் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்துவது தொடர்பாக கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இத்திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற விண்ணப்பிக்க தகுதி பற்றி அரசு தரப்பில் இருந்து ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இத்திட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அல்லது மேல் உள்ளவர்கள் தகுதியானவர்கள் என எந்த பட்டியலும் இல்லை. மாவட்டத்திற்கு விண்ணப்ப படிவங்கள் வந்ததும் அந்தந்த பகுதியில் ரேஷன் கடைகளில் இருந்து வீடு, வீடாக வினியோகிக்கப்படும்.

எந்த சான்றிதழும் தேவையில்லை

விண்ணப்ப படிவத்தில் ரேஷன் கார்டு எண் எழுதப்பட்டிருக்கும். படிவத்தோடு, டோக்கனும் கொடுக்கப்படும். அந்த டோக்கனில் எந்த தேதியில் ரேஷன் கடைக்கு வர வேண்டும் என குறிப்பிடப்படும். அந்த தேதியில் பயனாளிகளிடம் பயோமெட்ரிக் மூலம் தகவல் பெறப்படும். குடும்ப தலைவி தான் நேரில் வர வேண்டும். விண்ணப்ப படிவத்தை வேறு யாரிடமும் கொடுத்து அனுப்பக்கூடாது.

பயோமெட்ரிக் தகவல் பெறப்பட முடியாத நேரத்தில் ஓ.டி.பி. மூலம் தகவல் பெறப்படும். கொடுக்கப்படும் விண்ணப்ப படிவத்தை முகாம் நடத்தி பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தில் உள்ள தகவலை மட்டும் தெரிவித்தால் போதும். வருமான சான்றிதழ் உள்பட எந்த சான்றிதழும் இணைக்க தேவையில்லை.

விழிப்புணர்வு

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு முகாம் நடத்தி ரேஷன் கார்டு வினியோகிக்கப்படும். இத்திட்டத்தில் உரிமை தொகை பெற தகுதியாக இருந்தும், தகுதியானவர் இல்லை என குறுந்தகவல் வந்தால் நீங்கள் மேல்முறையீடு செய்யலாம். அந்த மேல்முறையீடு தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அரசு தரப்பில் இருந்து வினியோகிக்கப்படும் விண்ணப்ப படிவத்தை தான் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அரசு கொடுத்த விண்ணப்ப படிவம் தான் திருப்பி வருகிறதா? என்பதை பார்க்க தனி வசதி உள்ளது. அதனால் கலர் ஜெராக்ஸ் எடுத்து போலியான விண்ணப்ப படிவம் வாங்க வாய்ப்பு இல்லை.

யாரும் ஏமாற வேண்டாம்

விண்ணப்ப படிவத்தை கலர் ஜெராக்ஸ் எடுக்க அல்லது அச்சகத்தில் அச்சடிக்க யாரேனும் வந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசிலும் இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்ட விண்ணப்ப படிவத்தை யாரேனும் தனிப்பட்ட முறையில் வினியோகித்தாலோ அல்லது உரிமை தொகை பெற்று தருவதாகவோ, விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து விண்ணப்பித்து தரப்படும் என யாரேனும் ஈடுபட்டால், அவர்கள் பற்றி புகார் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

யாரிடமும் பணம் கொடுத்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம். இத்திட்டம் தொடர்பான புகார்களை கண்காணிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்ட பணிகளுக்காக 6 ஆயிரம் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் கூடுதலாக 20 சதவீதம் தேர்வு செய்து ஒதுக்கீடு வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments