புதுக்கோட்டையில் இஞ்சி விலை ‘கிடுகிடு’ உயர்வு கிலோ ரூ.300-க்கு விற்பனை




புதுக்கோட்டையில் இஞ்சியின் விலை `கிடுகிடு'வென உயர்ந்து ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனையாகிறது.

இஞ்சி விலை

காய்கறி விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. முதலில் தக்காளி விலை உயரத் தொடங்கியது. கடந்த மாதத்தில் கிலோ ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்போது ரூ.110 முதல் ரூ.130 வரை புதுக்கோட்டை மாா்க்கெட்டில் விற்பனை ஆகிறது. உழவர் சந்தையில் தோட்டக்கலை துறை மூலம் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில் தக்காளியை தொடர்ந்து இஞ்சி விலையும் ‘கிடு கிடு' வென உயர்ந்தது.

புதுக்கோட்டை உழவர் சந்தையில் ஒரு கிலோ இஞ்சி கடந்த வாரங்களில் ரூ.200 அளவில் இருந்தது. தற்போது கிலோ ரூ.300 ஆக உயர்ந்து விற்பனையாகிறது. இதேபோல், பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், பீன்ஸ், முருங்கைக்காய், அவரைக்காய், பாகற்காய் உள்பட சில காய்கறியின் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வருகிறது.

‘கிடுகிடு’ உயர்வு

இது ஒரு புறம் இருக்க பூண்டு விலையும் யாரும் எதிர்பாராதவிதமாக எகிறியது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.120-க்கு விற்பனையான பூண்டு, தற்போது ஒரு கிலோ ரூ.200 ஆக அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் தற்போது சின்ன வெங்காயமும் இடம்பெற்று விட்டது.

கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. கிலோ ரூ.60 முதல் ரூ.80-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு ரூ.130-க்கு விற்றது. இந்த நிலையில் உழவர் சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை நேற்று கிடு கிடுவென உயர்ந்து கிலோ ரூ.160-க்கு விற்றது. வெளிமார்க்கெட் மற்றும் சில்லறை கடைகளில் இவற்றின் விலையை விட சற்று கூடுதல்விலைக்கு விற்பனையானது.

வரத்து குறைவு

சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிப்பால், வரத்து குறைந்து விட்டது. இதன் காரணமாகவே அதன் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து உள்ளது. வரக்கூடிய நாட்களிலும் அதன் விலை சற்று உயர வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கும் மேலும் பேரிடியாக அமைந்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments