அறந்தாங்கியில் அங்கன்வாடிக் கட்டட மேற்கூரை இடிந்து விழுந்ததில், இரண்டு சிறுவர்கள் காயம்.




புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டில் நகராட்சி அலுவலகம் அருகே அங்கன்வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 20 குழந்தைகள் வரை படித்து வருகின்றனர். இந்த நிலையில், வழக்கம்போல் செயல்பட்ட அங்கன்வாடிக்கு இன்று 12 குழந்தைகள் வந்திருக்கின்றனர். இதற்கிடையே, இந்தப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் நடைபெற்றிருக்கின்றன.


அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்து, சிறுவர்கள் காயம்! - அறந்தாங்கியில் அதிர்ச்சி

இந்த நிலையில்தான், அங்கன்வாடிக்குள் அமர்ந்து குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கன்வாடிக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது. இதில், இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர். கால் உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்த குழந்தைகளை, அருகிலிருந்தவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த பெற்றோர்கள், பதற்றத்துடன் தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து குழந்தைகளின் பெற்றோர்கள், ``இந்தக் கட்டடம் கட்டி எப்படியும் 30 வருஷங்களுக்கும் மேலதான் இருக்கும். ஒரு வருஷத்துக்கு முன்னால, கட்டடத்தை சீரமைக்கணும்'னு தொடர்ந்து வலியுறுத்துனதால, பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டாங்க. ஆனாலும், அந்த கான்ட்ராக்டர் முறையாகப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை. அதனாலதான், இந்த மாதிரி நடந்திருக்கு. நல்ல வேளையாக பிள்ளைங்க எல்லாரும் அந்த இடத்துல இல்லாம போயிட்டாங்க. சம்பந்தப்பட்டவங்கமீது உரிய நடவடிக்கை எடுக்கணும்" என்றனர்.

அங்கன்வாடியின் மேற்கூரைச் சுவர் இடிந்து, சிறுவர்கள்மீது விழுந்த சம்பவம் அறந்தாங்கியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments