கோபாலப்பட்டிணம் உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் வரலாறு!




கோபாலப்பட்டிணம் உமர் முக்தார் நற்பணி மன்றத்தின் வரலாறு குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே அமைந்துள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த 17/11/2012 அன்று இளைஞர்களால் ஊருக்கு ஏதாவது நம்மால் முடிந்தளவு நல்லது செய்ய வேண்டும் என்றும், இளைஞர்கள் தவறான வழிகளில் சென்றுவிடாமல் பொதுநல சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் இளைய தலைமுறைகளை ஒன்றினைத்து உருவாக்கப்பட்ட மன்றம் தான் இந்த உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ஆகும். இந்த மன்றமானது அரசு விதிமுறைகளின் படி பதிவு செய்யப்பட்டு அரசு அங்கீகாரம் பெற்று இயங்கி வருகிறது. இந்த மன்றத்தின் மூலம் அன்றைய காலகட்டத்தில் ஊருக்கு தேவையான சில அடிப்படை வசதிகள், மருத்துவ முகாம்கள், கூட்டு குர்பானி, மரக்கன்று நடுதல் மற்றும் இன்னும் பிற சேவைகளை உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் செய்தது.

உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் யார் இவர்கள்? என்ன செய்தார்கள்? என்று பார்ப்போம்...

கோபாலப்பட்டிணத்தில் 2012-ஆம் ஆண்டில் இளைய தலைமுறைகள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுப்பில் உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் உருவானது. இந்த மன்றத்தின் அலுவலகமானது பெரிய பள்ளிவாசல் அருகில் அமைந்துள்ளது. இந்த மன்றத்தில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர் என நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் தலைமையில் பல்வேறு நலத்திட்டங்கள், ஊருக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பசுமை திட்டங்களான மரம் நடுவது போன்ற பல்வேறு பணிகளை இந்த மன்றத்தின் மூலம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மன்றத்தில் இருக்கும் உறுப்பினர்கள் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தாலும் ஊர் நலனை கருத்தில் கொண்டு ஒரே குடையின் கீழ் தங்களை இணைத்துக்கொண்டு ஒற்றுமையுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் நோக்கம்.?
உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள், மருத்துவ முகாம்கள் மற்றும் பிற பயனுள்ள திட்டங்களை இதுவரை செய்து வந்த நிலையில், இனி வரும் காலங்களில் இளைஞர்களுக்கு கல்வி வழிகாட்டி முகாம் நடத்துவது, அரசு அறிவித்துள்ள அனைத்து விதமான சலுகைகளும் தகுதி உடைய மக்களுக்கு பெற்று கொடுப்பது மற்றும் ஊருக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் இன்னும் பிற அரசு சார்ந்த வசதிகளை பெற அரசு அதிகாரிகளுக்கும், சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களுக்கும் மனு அளித்து ஊர் நலனுக்காக திட்டங்களை கொண்டு வருவது போன்றவைகளை நோக்கமாக கொண்டது தான் உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ஆகும்.

எனவே ஊரில் உள்ள இளைய தலைமுறைகள் இந்த உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தில் தங்களை இணைத்துக் கொண்டு பணி செய்ய அன்போடு அழைக்கின்றோம்.மேலும் பெரியவர்கள் இந்த மன்றத்தை திறம்பட கொண்டு செல்ல தங்களுடைய ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் செய்த பணிகள் விபரம்:

கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் நுழைவு வாயில் பழனி பாபா நினைவு வளைவு அமைத்தல்: 


கோபாலப்பட்டிணத்தில் பல ஆண்டுகளாக நுழைவு வாயில் இல்லை. இந்நிலையில் பழனி பாபா நமது ஊருக்கு வருகை தந்தார். அப்பொழுது உங்கள் ஊருக்கு ஒரு நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என்று அப்போது கூறினார். இதனையடுத்து சில நாட்கள் கழித்து அங்கே நுழைவு வாயில் தூண்கள் மட்டும் அமைத்தார்கள். அதன் பிறகு 20 வருடங்களுக்கு மேல் நுழைவு வாயில் அமைக்கவில்லை. அதன் பிறகு உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக ஷஹித் அல்ஹாஜ் பழனி பாபா நினைவு வளைவு அமைத்து  22/08/2018 அன்று பெருநாள் தொழுகை முடிந்து ஜமாத் தலைவர் ஜனாப் ASM.செய்யது முஹம்மது அவர்களால் திறக்கப்பட்டது. பல வருடங்களாக திறக்க படாத ஒன்றை நாங்கள் திறந்தோம். சில அரசியல் சூழிச்சிகளினால் இரவோடு, இரவாக உயர் காவல் அதிகாரி முன்னிலையில் இடித்தார்கள். இன்ஷா அல்லாஹ் விரைவில் பழனி பாபா நினைவு வளைவு மீண்டும் அமைக்கப்படும்.

கோபாலப்பட்டிணம் தெருக்களுக்கு மேப் (MAP)பெயர்கள் வைக்கப்பட்டது: 


இரண்டு ஆண்டுகாலமாக பெயர் வைக்க வேண்டும் என்று பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் முயற்சியால் ஊர் ஜமாத்தின் அனுமதியோடு நமதூரில் உள்ள தெருக்களுக்கு பெயர் வைக்கப்பட்டது. தெருக்களின் பெயர்களை சுலபமாக தெரிந்து கொள்ள வசதியாக அந்தந்த தெருக்களின் நுழைவாயிலில் சாயம் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதன் செலவுகள் அனைத்தும் மன்றத்தின் சார்பாக செய்யப்பட்டது. இதற்காக பாடுபட்ட நற்பணி மன்ற இளைஞர்கள் மற்றும் இதற்கு பண உதவி புரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் உமர் முக்தார் நற்பணி மன்றத்தின் சார்பாக இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மாபெரும் இலவச அக்குபஞ்சர் முகாம்: 


கோபாலப்பட்டிணத்தில் உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக 20/03/2016 அன்று மாபெரும் இலவச அக்குபஞ்சர் முகாம் கோபாலப்பட்டிணத்தில் உள்ள தங்கமஹால் திருமனமண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமை ஜமாத் தலைவர் OSM.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் துவக்கி வைத்தார். இதில் 17 மருத்துவர்கள் மற்றும் 240-க்கும் மேற்ப்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மீமிசல் வர்த்தக சங்கம் மற்றும் தமுமுக, புதூர் அல் அமீன் மன்ற நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டார்கள்.

பெண்களுக்கான இப்தார் நிகழ்ச்சி நடத்துதல்: 


கோபாலப்பட்டிணத்தில் உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக பெண்களுக்கான சிறப்பு இப்தார் நிகழ்ச்சி ரஹ்மானியா பெண்கள் மதரஸாவில் வருடம், வருடம் ரமலான் மாதத்தில் சிறப்பு பயான் வைத்து இப்தார் நிகழ்ச்சி உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்பட்டு வருகிறது.

கூட்டு குர்பானி:
கோபாலப்பட்டிணத்தில் உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக வருடம், வருடம் கூட்டு குர்பானி ஏற்பாடு செய்யப்பட்டு, அதை மன்றத்தின் சார்பாக ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

ஊக்கத்தொகை வழங்குதல்:


கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு உமர் முக்தார் கல்வி அறக்கட்டளை சார்பாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 

மர கன்றுகள் நடுதல்:


கோபாலப்பட்டிணத்தில் உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக அவுலியா நகர் நுழைவாயிலில் இருந்து மைத்தாங்கரை வரை மரகன்றுகள் நடப்பட்டு கூண்டு வைத்து பராமரிக்கப்பட்டது. ஆனால் சமூக விரோதி ஒருவன் இரவு நேரத்தில் இருசக்கர வாகனம் மூலம் கூண்டு மீது ஏற்றி சேதப்படுத்தினான். ஏன் அவ்வாறு செய்தார் என்று இறைவன் ஒருவனே அறிவான். அதற்க்கான தண்டனையை இறைவன் அவருக்கு வழங்குவான்.

சுத்தம் செய்யும் பணி:



கோபாலப்பட்டிணம் உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக ஊரில் உள்ள முக்கிய இடங்களான மைத்தாங்கரை, சின்னப் பள்ளிவாசல், ஆலமரம், நெடுங்குளம் ஆகிய முக்கிய இடங்களில் JCB மூலம் கருவேல மரங்களை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது. 

நெடுங்குளத்தில் படித்துறை அமைத்தல்:
நெடுங்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த படித்துறை சேதமடைந்து இருந்ததால் வயதானவர்கள் குளிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டனர். இதனையடுத்து உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் சார்பாக தற்காலிக முறையில் படித்துறை அமைக்கப்பட்டது.

இரத்த வகை பரிசோதனை முகாம்:

கோபாலப்பட்டிணத்தில் உமர்முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக 06/12/2012 அன்று உமர்முக்தார் மன்றத்தில் இரத்தம் கண்டறிதல் முகாம் நடத்தப்பட்டது. காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது. மறைந்த மருத்துவர் மர்ஹூம். முகமது இலியாஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைப்பெற்றது. சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

பள்ளிவாசல்கள் சுத்தம் செய்தல்:

கோபாலப்பட்டிணத்தில் உமர்முக்தார் இஸ்லாமிய நற்பணி மன்றத்தின் சார்பாக ஊரில் உள்ள பெரிய பள்ளிவாசல், காட்டுக்குளம் பள்ளிவாசல், அவுலியா நகர் பள்ளிவாசல் என அனைத்து பள்ளிவாசல்களிலும் ஒட்டடையும், வெளிப்புற பகுதியில் குப்பைகள் காணப்பட்டது. இதனால் பள்ளிவாசல் சற்று பொழிவிழந்து காணப்பட்டது. அதன் காரணமாக அங்கு இருந்த ஒட்டடைகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டு பிறகு பள்ளிவாசல் முழுவதும் கழுவி விடப்பட்டது.

தகவல்: 
உமர்முக்தார் ஆலோசனை குழு உறுப்பினர்கள், கோபாலப்பட்டிணம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments