புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகைக்கான படிவம் இன்று முதல் வீடு, வீடாக வினியோகம் விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடைபெறுகிறது




புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான படிவம் இன்று (வியாழக்கிழமை) முதல் வீடு, வீடாக வினியோகிக்கப்பட உள்ளது. விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடைபெற உள்ளது.

விண்ணப்ப படிவம்

புதுக்கோட்டை மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்துவது குறித்து, அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம், நில நிர்வாக ஆணையர் நாகராஜன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நில நிர்வாக ஆணையர் நாகராஜன் தெரிவித்ததாவது:-

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 1,002 ரேஷன் கடைகள் உள்ளன. மொத்தம் 4 லட்சத்து 91 ஆயிரத்து 998 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும். முதல்கட்டமாக புதுக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, மணமேல்குடி, இலுப்பூர், பொன்னமராவதி ஆகிய 7 வட்டங்களில் 597 அமைவிடங்களில் 852 முகாம்களில் விண்ணப்பங்கள் பெறும் பணி வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி வரை செயல்பட உள்ளது.

பயோ மெட்ரிக் கருவி

அதனைத்தொடர்ந்து 2-ம் கட்டத்தில் திருமயம், கறம்பக்குடி, குளத்தூர், விராலிமலை, ஆவுடையார்கோவில் ஆகிய 5 வட்டங்களில் 415 அமைவிடங்களில் 535 முகாம்களில் விண்ணப்பங்கள் பெறும் பணிகள் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் கட்டத்தில் பெறப்படும் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு தேவையான 852 பயோ மெட்ரிக் கருவி தயாராக உள்ளது.

மேலும், இப்பணிகளில் ஈடுபடவுள்ள பணியாளர்கள், தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்வதற்காக 4,96,919 விண்ணப்பங்களும், 4,96,919 டோக்கன்களும் வரப்பெற்று முதல் கட்டமாக நடைபெறும் 7 தாலுகாவிற்கு தேவையான 3,06,454 விண்ணப்பப் படிவங்கள் பிரித்து தாசில்தார்கள் மூலம் அனைத்து தாலுகாவிற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இன்று முதல் வினியோகம்

மேற்கண்ட படிவங்களை ரேஷன் கடைகள் வாரியாக பிரிக்கப்பட்டு, ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) முதல் விண்ணப்ப படிவம் வீடு, வீடாக வினியோகிக்கப்படும். இந்த பணியால் பொருட்கள் வினியோகம் பாதிப்படையாது. மாவட்ட அளவில், கண்காணிப்பு பணியில் ஈடுபட துணை கலெக்டர் நிலையில் 13 ஒன்றியத்திற்கும் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலை சமாளிக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது. இந்த திட்டத்தில் பணம் பெற்று தருவதாக யார் கூறினாலும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments